டி20 உலகக்கோப்பையில் இந்தியாவிற்கு எதிரான போட்டியில் பாகிஸ்தான் படுதோல்வியடைந்த நிலையில் இருநாடுகளுக்கும் இடையிலான போட்டிகள் விரைவில் வணிக மதிப்பை இழக்கக் கூடும் என்பது தெரியவந்துள்ளது. ஒருதரப்பான போட்டி முடிவுகள் விமர்சனத்தையும் கிளப்பியுள்ளது.
உலகக்கோப்பை டி20 கிரிக்கெட் போட்டியில், இந்தியாவின் வெற்றி, பாகிஸ்தானை முன்பைவிட கடுமையாக பாதித்துள்ளது… ஐ.சி.சி. உடனான மோதல் போக்கு, இந்தியா உடன் விளையாட நிபந்தனை என அடுத்தடுத்த முட்டுக்கட்டைகள், இந்தியா – பாகிஸ்தான் இடையேயான போட்டியை மிகுந்த எதிர்பார்ப்புக்குள் தள்ளியது. பல கட்ட பேச்சுவார்த்தைக்கு பின் நடந்த போட்டியில் பாகிஸ்தான் வீரர்கள், இந்திய அணிக்கு கடுமையான சவால் அளிப்பார்கள் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், சத்தமே இல்லாமல் சரணடைந்தது, பாகிஸ்தான் அணி. இது ஒட்டுமொத்த பாகிஸ்தான் அணியையும் கடுமையான விமர்சனத்திற்கு ஆளாக்கியுள்ளது.

பாகிஸ்தான் உடனான ஒவ்வொரு போட்டியிலும் இந்தியா ஆதிக்கம் செலுத்தி வருவதால், முன்னாள் வீரர்கள், பார்வையாளர்களின் கூற்றுப்படி, இருநாடுகளுக்கு இடையேயான போட்டி வணிக மதிப்பை இழந்து வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. டி20 உலகக் கோப்பையில் ஒன்பது போட்டிகளில் எட்டு போட்டிகளில் இந்தியா, பாகிஸ்தானை தோற்கடித்துள்ளது . கடந்த ஆண்டு ஆசிய கோப்பையில் சல்மான் அலி அகாவின் அணி தொடர்ச்சியாக மூன்று தோல்விகளை சந்தித்திருந்தது.
2017 சாம்பியன்ஸ் டிராபி இறுதிப் போட்டியில் பாகிஸ்தான் அணி வெற்றி பெற்றதிலிருந்து, பாகிஸ்தான் அணி தனது பரம எதிரிகளுக்கு எதிராக ஒருநாள் போட்டியில் ஒன்றில் கூட வெற்றி பெறாத அளவுக்கு, வெள்ளை பந்து கிரிக்கெட்டில் இந்தியாவின் ஆதிக்கம் அதிகமாக உள்ளது. இதனால் கிரிக்கெட்டில் மிகவும் பரபரப்பாக பேசப்படும் ஆட்டங்கள் வணிக மதிப்பை இழந்து வருவதாக பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத்தின் முன்னாள் தலைவர் லெப்டினன்ட் ஜெனரல் (ஓய்வு) தௌகிர் ஜியா குறிப்பிட்டார்.
80, 90களில் இந்தியாவுக்கு எதிரான பல போட்டிகளில் வென்ற பாகிஸ்தான் அணிகளில், இடம்பெற்றிருந்த வாசிம் அக்ரம், வக்கார் யூனிஸ், ஷோயப் அக்தர், சக்லைன் முஷ்டாக், ரமீஸ் ராஜா போன்ற பிரபலங்கள் தற்போது கிரிக்கெட் வர்ணனையாளர்களாக உள்ளனர்… ஷோயப் மற்றும் சக்லைனின் கூற்றுப்படி, தற்போதைய பாகிஸ்தான் அணியை பார்ப்பது அவர்களுக்கு வேதனையான அனுபவமாகும்.. 80, 90களில் இந்தியாவுடன் விளையாடியபோது இருந்த குணமும், தீரமும் எங்கே? என்று கேள்வி கணைகளை தொடுத்துள்ளனர்.. சில போட்டிகளில் தோற்றாலும், அது எப்போதும் கடினமான போட்டியாக இருக்கும் என்பது அனைவருக்கும் தெரியும் என்று ஷோயப் அக்தர் கூறியுள்ளார். பாகிஸ்தான், இந்திய அணிக்கு எதிராக விளையாடும் போதெல்லாம் கேப்டன் வாசிம் அக்ரம் மற்றும் பிற மூத்த வீரர்கள், வீரர்களை விட்டுக்கொடுக்காமல் இருக்கத் தூண்டுவதையும் சக்லைன் நினைவு கூர்ந்தார்.

1999-ல் சென்னையில் இந்தியாவுக்கு எதிரான டெஸ்டில் நாங்கள் எப்படி வென்றோம் என்பது எனக்கு நினைவிருக்கிறது. சச்சின் பேட்டிங் செய்து கொண்டிருந்தார், இந்தியா வெற்றியை நெருங்கி வந்தபோது, சச்சினின் விக்கெட் மட்டும் போதும், நாங்கள் வெற்றி பெறுவோம் என்று வாசிம் பாய் எங்களைத் தொடர்ந்து வற்புறுத்திக் கொண்டிருந்தார். இந்த அணியில் அந்த உற்சாகம் எங்கே?” என்று சக்லைன் கேள்வி எழுப்பியுள்ளார்.
கராச்சியில் உள்ள ஒரு சினிமாப் பிளெக்ஸின் உரிமையாளரும் திரைப்பட விநியோகஸ்தருமான நதீம் மண்ட்விவாலா, போட்டி திரையிடலின் போது, பாகிஸ்தான் நான்கு ஆரம்ப விக்கெட்டுகளை இழந்தபோது கூடியிருந்தவர்களில் பெரும்பாலோர் வெளியேறுவதற்காக வரிசையில் நின்றதாகக் கூறினார். விஷயம் என்னவென்றால், பாகிஸ்தான் அரையிறுதிக்கு தகுதி பெற்றாலும், மீண்டும் இந்தியாவை எதிர்கொள்ள வாய்ப்புள்ளது, அதன் முடிவு என்னவாக இருக்கும் என்பது தங்களுக்குத் தெரியும், அது மிகவும் வேதனையானது என்று கிரிக்கெட் எழுத்தாளரும் ஆய்வாளருமான ஓமைர் அலவி குறிப்பிடுகிறார்.. ஸ்பான்சர்கள், விளம்பரதாரர்கள் உட்பட ஒருதரப்பாக முடிவடையும் யாரும் பார்க்க விரும்பாததால் இப்போது ரசிகர்களும் நம்பிக்கையை இழந்து வருகின்றனர். போட்டிகள் மிகவும் நெருக்கமாகவும் போட்டித்தன்மையுடனும் மாறாவிட்டால் இந்த போட்டிகளின் வணிக மதிப்பு குறைந்துவிடும் என்றும் கூறுகின்றனர்.
















