கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் பவானி ஆற்றில் கழிவுநீர் கலந்த தண்ணீரை குடிநீராக விநியோகம் செய்வதாக தமிழ் ஜனம் தொலைக்காட்சியில் செய்தி வெளியான நிலையில், கோவை மாவட்ட கூடுதல் ஆட்சியர் மற்றும் அதிகாரிகள், நேரில் ஆய்வு செய்தனர்.
மேட்டுப்பாளையம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட காரமடை கிழக்கு ஒன்றிய பகுதிகளில் உள்ள பள்ளேபாளையம், ஜடையம்பாளையம், மூடுதுறை, சின்ன கள்ளிப்பட்டி உள்ளிட்ட ஆறு ஊராட்சிகளுக்கு பவானி ஆற்றில் இருந்து குடிநீர் வடிகால் மூலம் வழங்கப்படும் தண்ணீர், மஞ்சள் நிறமாக மாறியது.
இதனால் பொதுமக்களுக்கு நோய்த்தொற்று பாதிப்பு ஏற்பட்ட நிலையில், குடிநீரை பொதுமக்கள் பயன்படுத்த முடியாத நிலை ஏற்பட்டது.
இதுகுறித்து தமிழ் ஜனம் தொலைக்காட்சியில் செய்தி ஒளிபரப்பானது. இந்நிலையில், கோவை மாவட்ட கூடுதல் ஆட்சியர் சங்கீத் பல்வான், மேட்டுப்பாளையம் சட்டமன்ற உறுப்பினர் செல்வராஜ் மற்றும் குடிநீர் வடிகால் வாரிய அதிகாரிகள் நேரில் ஆய்வு செய்தனர்.
ஜடையம்பாளையம் பகுதியில் உள்ள பவானி ஆறு மற்றும் மின்சாரம் எடுக்க அமைக்கப்பட்டுள்ள தடுப்பணைகளை அதிகாரிகள் பார்வையிட்டனர்.
அப்போது தண்ணீரின் அவலம் குறித்து அதிகாரிகளிடம் பொதுமக்கள் எடுத்துரைத்தனர்.
















