பொது மயானத்தை ஒடுக்கப்பட்ட சமூகத்தினர் பயன்படுத்த அனுமதி மறுப்பதும் தீண்டாமைக்கு சமமானது என சென்னை உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
ஈரோடு கருமாண்டிசெல்லிபாளையம் பகுதியில் பட்டியலின மக்கள் சுடுகாடாக பயன்படுத்தி வந்த நிலத்தை ரியல் எஸ்டேட் தரகர்கள் சேதப்படுத்தியது தொடர்பான மனு விசாரணைக்கு வந்தது.
அப்போது, ஒடுக்கப்பட்ட சமூகத்தினரை மயானம் அல்லது தகனம் செய்யும் இடத்திற்கு செல்ல அனுமதி மறுப்பதும் தீண்டாமையின் ஒரு வடிவம் என்று கருத்து தெரிவித்த நீதிபதி, ஆவணங்களில் நிலத்தை வேறு பெயரில் குறிப்பிட்டிருந்தாலும், அதை மக்கள் மயானமாக பயன்படுத்தி வருவதால், அதன் தன்மையை மாற்ற முடியாது எனக் குறிப்பிட்டார்.
எனவே, சம்பந்தப்பட்ட நிலத்தில் ஆக்கிரமிப்புகள் நடக்காமல் தடுக்க நடவடிக்கை எடுக்குமாறு பேரூராட்சி நிர்வாகத்திற்கும், மாவட்ட ஆட்சியருக்கும் உத்தரவிட்டதோடு, மயானத்தில் இருந்த கல்லறைகளை சேதப்படுத்தய நபர்கள் மீது நடவடிக்கை எடுக்கவும் நீதிபதி ஆணையிட்டார்.
















