அடுத்த 5 ஆண்டுகளில் 20 பில்லியன் அமெரிக்க டாலர்களுக்கு மேல் வர்த்தகம் மேற்கொள்ள இந்தியா-பிரேசில் உறுதிபூண்டுள்ளதாக பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்தார்.
பிரேசில் அதிபர் லூலா அரசுமுறைப் பயணமாக டெல்லி வந்துள்ள நிலையில், இந்தியா-பிரேசில் இடையே பல்வேறு ஒப்பந்தங்கள் கையெழுத்தாகியுள்ளன. முக்கிய கனிமங்கள் மற்றும் அரிய மண் தாதுக்கள் குறித்த புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் இருநாடுகளும் கையெழுத்திட்டன. இதைத்தொடர்ந்து பிரேசில் அதிபர் மற்றும் பிரதமர் மோடி கூட்டாக பேட்டியளித்தனர்.
அப்போது பேசிய பிரதமர் மோடி, இந்தியா – பிரேசில் இணைந்து செயல்படும்போது, உலகளாவிய தெற்கின் குரல் வலுவடையும் என்று தெரிவித்தார். அடுத்த 5 ஆண்டுகளில் 20 பில்லியன் அமெரிக்க டாலர்களுக்கு மேல் வர்த்தகம் மேற்கொள்ள இந்தியா-பிரேசில் உறுதிபூண்டுள்ளதாகவும் பிரதமர் குறிப்பிட்டார்.
விவசாயம், உரம் உள்ளிட்டவற்றில் ஒப்பந்தம் ஏற்பட்டுள்ளதால் இருநாடுகளிடையே உணவுப் பாதுகாப்பு உறுதிப்படுத்தப்படும் என்றும், சுகாதாரம் மற்றும் மருந்து துறைகளில் ஒத்துழைப்பை அதிகரிக்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்றும் தெரிவித்தார்.
















