பாகிஸ்தானின் ஐஎஸ்ஐ மற்றும் வங்கதேச பயங்கரவாத அமைப்புகளின் ஆதரவுடன், இந்திய மாநிலங்களில் நடத்த திட்டமிடப்பட்டிருந்த பயங்கரவாத சதியை பாதுகாப்பு அமைப்புகள் முறியடித்துள்ளன.
இந்தியாவின் உள்நாட்டு பாதுகாப்புக்கு எதிரான அச்சுறுத்தல்கள் தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வருகின்றன. எல்லைத் தாண்டிய சதித் திட்டங்கள் குறித்த புலனாய்வு தகவல்களின் அடிப்படையில், பாதுகாப்பு அமைப்புகள் தீவிர நடவடிக்கைகளை முன்னெடுத்து வருகின்றன. தீவிரவாத வலையமைப்புகள் மறைமுகமாக செயல்பட்டு சமூக அமைதியை சீர்குலைக்க முயற்சிக்கும் நிலையில், அவற்றை முன்கூட்டியே கண்டறிந்து முறியடிப்பது பாதுகாப்பு அமைப்புகளுக்கு முக்கிய சவாலாக உள்ளது. அந்த வகையில், தமிழ்நாடு மற்றும் மேற்கு வங்க மாநிலங்களில் நடத்தப்பட்ட ஒருங்கிணைந்த நடவடிக்கை மூலம், நம் நாட்டில் நடக்கவிருந்த ஒரு பேராபத்து தடுத்து நிறுத்தப்பட்டுள்ளது.
இவ்விரு மாநிலங்களில் பாதுகாப்பு அமைப்புகள் நடத்திய ஒருங்கிணைந்த நடவடிக்கை மூலம், இந்தியாவில் நடத்த திட்டமிட்டிருந்ததாக கூறப்படும் ஒரு பெரிய பயங்கரவாத தாக்குதல் முறியடிக்கப்பட்டுள்ளதாக போலீசார் தெரிவித்துள்ளனர். குறிப்பாக வெளிநாட்டு அமைப்புகளின் ஆதரவுடன் தமிழகத்தில் செயல்பட்டு வந்த 6 பேர் மற்றும் மேற்கு வங்கத்தில் செயல்பட்டு வந்த இருவர் என மொத்தம் 8 பேரை டெல்லி போலீசார் கைது செய்துள்ளனர். ஒரே நேரத்தில் நடத்தப்பட்ட சோதனைகளின் மூலம் இந்த கைது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
விசாரணை அமைப்புகள் வழங்கியுள்ள தகவலின்படி, கைது செய்யப்பட்டவர்கள் பாகிஸ்தான் மற்றும் வங்கதேசத்தைத் தளமாகக் கொண்ட தீவிரவாத அமைப்புகளுடன் தொடர்பில் இருந்ததாக சந்தேகிக்கப்படுகிறது. குறிப்பாக பாகிஸ்தான் உளவுத்துறையான ஐஎஸ்ஐ மற்றும் வங்கதேச தீவிரவாத அமைப்புகளின் ஆதரவுடன், இந்தியாவில் தாக்குதல்களை திட்டமிடும் பணியில் இக்குழு ஈடுபட்டிருந்ததாக கூறப்படுகிறது.
தமிழ்நாட்டின் திருப்பூர் மாவட்டத்தில் உள்ள ஊத்துக்குளி, பல்லடம் மற்றும் திருமுருகன்பூண்டி பகுதிகளில் ஆடை உற்பத்தி தொழிலில் ஈடுபட்டு வந்த 6 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். தங்கள் உண்மையான அடையாளங்களை மறைக்க போலி ஆதார் அட்டைகளை பயன்படுத்தி அவர்கள் நீண்ட காலமாக அப்பகுதிகளில் வசித்து வந்ததாக போலீசார் தெரிவித்துள்ளனர். இதே வழக்கில் தொடர்புடைய மேலும் இருவர் மேற்கு வங்கத்திலும் கைது செய்யப்பட்டுள்ளனர்.
அதே நேரத்தில் கைது செய்யப்பட்ட ஆறு பேரில் ஒருவர் வங்கதேசத்தைச் சேர்ந்தவர் என்ற தகவல் வெளியாகி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. விசாரணையின் போது, சந்தேக நபர்களிடம் இருந்து எட்டு கைப்பேசிகள் மற்றும் பதினாறு சிம் கார்டுகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. இவை மூலம் வெளிநாட்டு தொடர்புகள், நிதி பரிமாற்றங்கள் மற்றும் கூடுதல் உடந்தைகள் குறித்து தகவல்கள் சேகரிக்கப்பட்டு வருகின்றன.
டெல்லி மெட்ரோ நிலையங்கள் உள்ளிட்ட பகுதிகளில் “FREE KASHMIR” என்ற வாசகங்களுடன் ஒட்டப்பட்ட போஸ்டர்களே, இந்த குழுவை பாதுகாப்பு அமைப்புகளின் கவனத்திற்கு கொண்டு வந்ததாக கூறப்படுகிறது. தொடர்ந்து நடத்தப்பட்ட தொழில்நுட்ப கண்காணிப்பு மற்றும் புலனாய்வு விசாரணையில், சமூக வலைதளங்கள் வழியாக பாகிஸ்தான் ஆதரவு தீவிரவாத கருத்துகளைப் பகிர்ந்ததும், டெல்லி உள்ளிட்ட நகரங்களில் கண்காணிப்பு பணிகளில் ஈடுபட்டதும் உறுதி செய்யப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இந்த நிலையில், கைது செய்யப்பட்ட அனைவரும் ரயில் மூலம் டெல்லிக்கு அழைத்து செல்லப்பட்டு தீவிர விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர். டெல்லி போலீசார் மற்றும் மத்திய புலனாய்வு அமைப்புகள் இணைந்து, இந்த வலையமைப்பின் முழு பின்னணியை கண்டறிய விசாரணையை தீவிரப்படுத்தியுள்ளனர். இந்த நடவடிக்கையால் ஒரு பெரிய பயங்கரவாத தாக்குதல் தடுக்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ள நிலையில், நாடு முழுவதும் பாதுகாப்பு கண்காணிப்பு முடுக்கிவிடப்பட்டுள்ளது.
















