பிரதமர் நரேந்திர மோடியின் வரலாற்று சிறப்புமிக்க பயணம் இஸ்ரேல் – இந்தியா இடையேயான நெருக்கமான உறவை உலகளவில் பிரதிபலித்துள்ளது. அரவணைப்புகள், பாராட்டுகள் மேலும் பல சுவாரஸ்மான சம்பவங்கள் இரு தலைவர்களுக்கு இடையேயான நட்பின் ஆழத்தை மேலும் ஆழப்படுத்தியது..
பிரதமர் மோடி கடந்த 2017-ம் ஆண்டு இஸ்ரேலுக்கு அரசு முறைப் பயணம் மேற்கொண்டார். அதன்பின் 9 ஆண்டுகள் கழித்து இரண்டுநாள் அரசு முறைப் பயணமாக இஸ்ரேல் சென்றார். டெல் அவிவ் நகரில் உள்ள பென்குரின் சர்வதேச விமான நிலையம் பிரதமர் மோடியின் வருகைக்காக காத்திருந்தது. விமானத்தில் வந்திறங்கிய பிரதமர் மோடியை வரவேற்ற இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவும் அவரது மனைவி சாராவும், சிவப்பு கம்பள வரவேற்பு அளித்தனர். பிரதமர் மோடியை, இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு கட்டியணைத்து வரவேற்றார். அப்போது இரு தலைவர்களுக்கும் ஒருவரையொருவர் ஆரத்தழுவி அன்பை பரிமாறிக்கொண்டது அவர்களுக்கு இடையேயான நெருக்கத்தை பிரதிபலித்தது…

வரவேற்பின்போது பிரதமர் மோடியின் பாக்கெட்டில் இருந்த நிறத்தை சுட்டிக்காட்டிய நெதன்யாகு, தனது மனைவியின் உடையும் அதே நிறத்தில் இருப்பதை காட்டினார். அவள் என்ன அணிந்திருக்கிறாள் என்று பார்த்தீர்களா? என்று நெதன்யாகு கேள்வி கேட்க, ஆமாம், குங்குமப்பூ எனறு மோடி சிரித்தபடியே பதிலளித்தார். இது தற்செயலான நிகழ்வு என்றாலும் இரு தலைவர்களின் நட்பை உலகளவில் பறைசாற்றியது…
அதன் தொடர்ச்சியாக பிரதமர் மோடியை, இஸ்ரேல் நாடாளுமன்றத்திற்கு அழைத்துச் சென்றார் பிரதமர் நெதன்யாகு… மோடி நாடாளுமன்றத்திற்குள் நுழைந்தபோது, இஸ்ரேல் எம்.பி.,க்கள் மோடி, மோடி, குரல் எழுப்பி உற்சாக வரவேற்பு அளித்தனர்..

பிரதமர் மோடியை வரவேற்று பேசிய இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு, இந்தியாவும், இஸ்ரேலும் சகோதர நாடுகள் என்றார். பிரதமர் மோடியை கட்டியணைத்து வரவேற்பது உண்மையிலேயே மிகச்சிறப்பானது என்ற அவர், மோடியை தனது நண்பர் மட்டுமல்ல, தனது சகோதரர் என்றும் அழைத்தார்… MODI HUG சிறப்பு வாய்ந்தது, உலகம் முழுவதும் நன்கு அறியப்பட்டது என்று கூறிய நெதன்யாகு, நீங்கள் ஒருவரை நெருக்கமாக, உண்மையாக ஆரத்தழுவும்போது அது ஒரு செயல் அல்ல, உணர்வுபூர்வமான என்பதை அறிவீர்கள் என்றார். MODI-யின் HUG-ஐ இங்கு இருக்கும் ஒவ்வொரு நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு திருப்பித்தர விரும்புவதாகவும் நெதன்யாகு குறிப்பிட்டார்..

இந்தியாவிற்கும் இஸ்ரேலுக்கும் இடையிலான உறவுகளை வலுப்படுத்துவதில் பிரதமர் மோடியின் பங்களிப்பை அங்கீகரிக்கும் விதமாக இஸ்ரேல் அவருக்கு ‘ஸ்பீக்கர் ஆஃப் தி நெசெட் பதக்கத்தை வழங்கிய கௌரவப்படுத்தியது. இஸ்ரேல் நாடாளுமன்றத்தின் மிக உயர்ந்த கௌரவமான இந்தப் பதக்கத்தைப் பெற்ற முதல் தலைவர் இந்தியப் பிரதமர் தான் என்பதன் மூலம் இரு நாடுகளுக்கு இடையேயான உறவு எவ்வளவு ஆழமானது என்பதை புரிந்து கொள்ள முடியும்… கடந்த 2018 ஆம் ஆண்டு பாலஸ்தீனம் சென்ற மோடிக்கு அந்நாட்டின் உயரிய ‘கிராண்ட் காலர் ஆஃப் தி ஸ்டேட் ஆஃப் பாலஸ்தீன்’ விருது வழங்கப்பட்டது. இதன்மூலம் இஸ்ரேல் மற்றும் பாலஸ்தீனம் ஆகிய இரு நாடுகளின் உயரிய விருதைப் பெற்ற முதல் உலகத் தலைவர் என்ற பெருமை மோடிக்கு கிடைத்துள்ளது.
பின்னர் இஸ்ரேல் நாடாளுமன்றத்தில் உரையாற்றிய பிரதமர் மோடி, இஸ்ரேலுடனான இந்தியாவின் நெருங்கிய உறவை உறுதிப்படுத்தினார். இந்தியா இஸ்ரேலை முறையாக அங்கீகரித்த அதே நாளில், தன் பிறந்ததாகக் குறிப்பிட்டார். 2023 அக்டோபர் 7ம் தேதி இஸ்ரேலிய பொதுமக்கள் மீது ஹமாஸ் நடத்திய தாக்குதல் காட்டுமிராண்டித்தனமானது என்று தெரிவித்தார். ஹமாஸ் நடத்திய தாக்குதலில் உங்கள் வேதனையை உணர்வதாக கூறிய பிரதமர் மோடி, இந்தியாவும் நீண்ட காலமாக பயங்கரவாதத்தின் வலியை தாங்கி வருவதாகவும், மும்பை தீவிரவாத தாக்குதலும், இஸ்ரேலில் நடைபெற்ற தாக்குதலும் ஒன்றுதான் என்றார். பொதுமக்கள் கொல்லப்படுவதை எந்த காரணத்தாலும் நியாயப்படுத்த முடியாது என்றும் குறிப்பிட்ட பிரதமர் மோடி, தீவிரவாத விஷயத்தில் இஸ்ரேலுக்கு ஆதரவாக இந்தியா உள்ளதாகக் கூறினார். பாலஸ்தீன பிரச்சினைக்குத் தீர்வு காண வேண்டிய நேரம் வந்துவிட்டதாக குறிப்பிட்ட பிரதமர் மோடி, அமைதிக்கான பேச்சுவார்த்தையைத் தொடங்க வேண்டும் என இந்தியா வலியுறுத்துவதாக தெரிவித்தார். இஸ்ரேல் நாடாளுமன்றத்தில் அமெரிக்க அதிபர் ட்ரம்ப், அர்ஜென்டினா அதிபர் ஜாவீர் மிலே உட்பட சிலர் மட்டுமே உரை நிகழ்த்தியுள்ளனர். இஸ்ரேல் நாடாளுமன்றத்தில் உரையாற்றிய முதல் இந்திய அரசியல் தலைவர் பிரதமர் மோடிதான் என்பது குறிப்பிடத்தக்கது.

நாடாளுமன்றத்தில் உரையாற்றிய பின்னர், பிரதமர் மோடியும் நெதன்யாகுவும் ஒரு தொழில்நுட்ப கண்காட்சிக்கு காரில் பயணம் செய்தனர். இஸ்ரேலின் நெதன்யாகு, காரில் இருவரும் இருக்கும் படத்தை சமூக ஊடகங்களில் பகிர்ந்து கொண்டு, “ஹம் சாத் ஆகே பத் ரஹே ஹைன், நாங்கள் ஒன்றாக முன்னேறி வருகிறோம்” என்று பதிவிட்டார். இது இரு தலைவர்களுக்கும் இடையிலான நல்லுறவை மீண்டும் ஒருமுறை வெளிப்படுத்தியது. முன்னதாக, பிரதமர் மோடி பிரான்சின் இம்மானுவேல் மக்ரோன், ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின், பிரிட்டிஷ் பிரதமர் கெய்ர் ஸ்டார்மர் மற்றும் ஜெர்மன் அதிபர் பிரீட்ரிக் மெர்ஸ் ஆகியோருடன் இதேபோன்ற தருணத்தைப் பகிர்ந்து கொண்டார்.
இஸ்ரேலில் மோடியின் முதல் நாள் கொண்டாட்டம் பெஞ்சமின் நெதன்யாகுவுடன் ஒரு தனிப்பட்ட இரவு விருந்துடன் நிறைவடைந்தது. வழக்கமாக கோட் சூட்களில் இருக்கும் நெதன்யாகு, மோடி ஜாக்கெட் என்று பிரபலமாக அறியப்படும் நேரு ஜாக்கெட்டை அணிந்திருந்தார். அவர் அதை ஒரு எளிய காலரைக் கொண்ட வெள்ளை, நீண்ட கை குர்தா பாணி சட்டையுடன் இணைத்திருந்தார். இந்த உடையும் இந்தியாவுடன் நட்பு பாராட்டுவதில் இஸ்ரேல் எவ்வளவு துடிப்பாக இருப்பது என்பதையே உலகிற்கு வெளிச்சம் போட்டு காட்டியது…

















