இஸ்ரேல் – அமெரிக்க தாக்குதலுக்கு பதிலடியாக ஈரான் படைகள் அதிரடி தாக்குதல் நடத்தி வரும் நிலையில், இஸ்ரேல் உள்ளிட்ட நாடுகளில் உள்ள இந்தியர்கள் பாதுகாப்பான இடங்களுக்கு செல்ல இந்திய தூதரகம் அறிவுறுத்தியுள்ளது.
ஈரான் மீது இஸ்ரேல், அமெரிக்கா நேற்று அதிரடி தாக்குதல் நடத்தியது. ஈரானின் அணு சக்தி மையங்கள், அணு சக்தி உட்கட்டமைப்புகள், ராணுவ தளங்கள் என பல்வேறு பகுதிகளை குறிவைத்து தாக்குதல் நடத்தப்பட்டது. இந்த தாக்குதலுக்கு பதிலடியாக இஸ்ரேல் மீதும், மத்திய கிழக்கில் அமெரிக்காவின் நட்பு நாடுகள் மீதும் ஈரான் தாக்குதல் நடத்தி வருகிறது.
இதற்கிடையே, ஈரான், இஸ்ரேல் உள்ளிட்ட மத்திய கிழக்கு நாடுகளில் உள்ள இந்தியர்கள், பதற்றமான பகுதிகளை விட்டு, பாதுகாப்பான இடங்களுக்கு செல்லுமாறு இந்திய தூதரகம் அறிவுறுத்தியுள்ளது. மேலும், உதவி தேவைப்படுவோர் உடனடியாக தங்களை தொடர்புகொள்ள வேண்டும் எனவும் இந்திய தூதரகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதேபோல, இஸ்ரேலில் உள்ள இந்திய தூதரகமும், எகிப்து அல்லது ஜோர்டான் வழியாக இந்தியர்களை பாதுகாப்பாக வெளியேற்ற திட்டமிட்டுள்ளது. இந்தியர்கள் வெளியேற பாதுகாப்பான பாதை மற்றும் வாய்ப்பு கிடைக்கும் தருணத்தை எதிர்நோக்கி காத்திருப்பதாகவும் தூதரகம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
















