ஈரான் மீதான தாக்குதல் காரணமாக இந்தியாவில் வன்முறை சம்பவங்கள் வெடிக்க வாய்ப்புள்ளதாக, அனைத்து மாநிலங்களுக்கும் மத்திய உள்துறை அமைச்சகம் அவசர எச்சரிக்கை விடுத்துள்ளது.
ஈரான் மீது இஸ்ரேல் மற்றும் அமெரிக்கா இணைந்து கடந்த பிப்ரவரி 28-ம் தேதி இருமுனை தாக்குதல் நடத்தின.
இந்த தாக்குதலில் அந்நாட்டின் உச்ச தலைவர் அயத்துல்லா அலி கமேனி உள்ளிட்ட முக்கிய தலைவர்கள் கொல்லப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.
இந்த சூழலில் இந்தியாவில் வன்முறை சம்பவங்கள் வெடிக்க வாய்ப்புள்ளதாக அனைத்து மாநிலங்களுக்கும் மத்திய உள்துறை அமைச்சகம் அவசர எச்சரிக்கை விடுத்துள்ளது.
இது தொடர்பாக மாநில தலைமைச் செயலாளர்கள் மற்றும் காவல்துறை தலைமை இயக்குநர்களுக்கு அனுப்பப்பட்ட கடிதத்தில், நாட்டின் பல பகுதிகளில் ஷியா அமைப்புகள் மற்றும் ஈரான் ஆதரவுக் குழுக்கள் போராட்டங்களில் ஈடுபட வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், அமெரிக்கா, இஸ்ரேல் மற்றும் ஈரான் தூதரகங்களுக்கு பலத்த பாதுகாப்பு வழங்கவும், வன்முறையைத் தூண்டும் உரைகள் நிகழ்த்தும் பேச்சாளர்களை கண்காணிக்கவும் உத்தரவிடப்பட்டுள்ளது.
சமூக வலைதளங்களில் பரவும் வதந்திகள் மீது கண்காணிப்பை தீவிரப்படுத்தப்பட வேண்டும் என்றும் அதில் கூறப்பட்டுள்ளது. ஏற்கனவே ஜம்மு-காஷ்மீர், லடாக் மற்றும் உத்தரப் பிரதேசம் ஆகிய மாநிலங்களில் போராட்டங்கள் தொடங்கியுள்ள நிலையில், சட்டம் ஒழுங்கை உறுதிப்படுத்த அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும் எடுக்குமாறு மத்திய அரசு வலியுறுத்தியுள்ளது.
















