மதுரைக்கு வர இருக்கும் முதலமைச்சர் ஸ்டாலினை முற்றுகையிட்டு மனு அளிக்க உள்ளதாக பொதுமக்கள் தெரிவித்ததால் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.
கல்லணை புதூர், அச்சங்குளம், நெடுங்குளம், உள்ளிட்ட கிராமங்களில் சட்ட விரோதமாக கனிம வளங்கள் அள்ளப்படுவதாகவும், அதனை தடுக்க நடவடிக்கை எடுக்குமாறும் கிராம மக்கள் பல்வேறு கட்ட போராட்டங்களை நடத்தினர்.
இந்த நிலையில் முதலமைச்சர் ஸ்டாலின் மதுரைக்கு வர உள்ள நிலையில் பேரணியாக சென்று அவரிடம் மனு அளிக்க உள்ளோம் என கிராம மக்கள் சார்பில் போஸ்டர்கள் ஒட்டப்பட்டிருந்தது.
அதன் படி கல்லணை புதூர் கிராமத்தில் மக்கள் ஒன்று திரண்ட நிலையில் அங்கு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகாகவும், பேரணியை தடுத்து நிறுத்துவதற்காகவும் போலீசார் குவிக்கப்பட்டனர்.
சட்டவிரோத கல்குவாரிகள் மீது நடவடிக்கை எடுக்க தவறிய காவல்துறையினர், மனு அளிக்கவிடாமல் தங்களை தடுப்பதாக கிராம மக்கள் வேதனை தெரிவித்தனர்.
















