மத்திய அரசின் நடவடிக்கையால் கனடாவைத் தொடர்ந்து அமெரிக்காவுக்கும் சேலம் சேகோ சர்வ் மூலம் 500 கிலோ ஜவ்வரிசி விற்பனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் 28 மாவட்டங்களில் பயிரிடப்படும் மரவள்ளி கிழங்கின் மூலம் ஸ்டார்ச் ஜவ்வரிசி உள்ளிட்ட பொருட்கள் தயாரிக்கப்படுகிறது. சேலம் சேகோ சர்வ மூலம் கலப்படம் இல்லாத ஜவ்வரிசி வெளிமாநிலங்களுக்கு விற்பனை செய்யப்பட்டு வந்தது. கடந்த சில ஆண்டுகளாக இதன் விலை எதிர்பார்த்த அளவு இல்லாததால் உற்பத்தியாளர்கள் மட்டுமின்றி விவசாயிகள் கடுமையாக பாதிக்கப்பட்டனர்.
சேலம் சேகோ சர்வில் பல லட்சம் மூட்டைகள் தேக்கம் அடைந்ததால் விவசாயிகள் மரவள்ளிக்கிழங்கை தொடர்ந்து பயிரிட முடியாத நிலை ஏற்பட்டது. இந்நிலையில் மத்திய அரசின் வர்த்தக அமைச்சகம் தலையிட்டு ஜவ்வரிசியை கனடா நாட்டுக்கு ஏற்றுமதி செய்வதற்கான நடவடிக்கையை மேற் கொண்டது.
இதனால் கடந்த மாதம் சேலத்தில் இருந்து 500 கிலோ ஜவ்வரிசி கனடா நாட்டுக்கு விற்பனைக்கு சென்றது. கனடாவை தொடர்ந்து தற்போது அமெரிக்காவுக்கு 500 கிலோ வேதிப்பொருட்கள் கலப்படமில்லா ஜவ்வரிசி அனுப்பி வைக்கப்பட்டது. மத்திய அரசின் இந்த நடவடிக்கைக்கு விவசாயிகள் மற்றும் உற்பத்தியாளர்கள் மத்தியில் வரவேற்பு அதிகரித்துள்ளது.
















