மேற்கு வங்கத்தில் நேற்று நடைபெற்ற சர்வதேச சந்தால் பழங்குடியின மாநாட்டில் கலந்து கொள்வதற்காக சென்ற குடியரசுத் தலைவர் திரௌபதி முர்முவை திட்டமிட்டே அவமானப்படுத்திய மேற்கு வங்க முதல்வர் அவமானப்படுத்தியுள்ளதாக தமிழக பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார்.
அவர் விடுத்துள்ள பதிவில், தமது மாநிலத்திற்கு வருகை தரும் நாட்டின் மூத்த குடிமகளான குடியரசுத் தலைவரை, நேரில் சென்று வரவேற்க வேண்டும் என்ற அடிப்படை அரசு பொறுப்பைக் கூட அறியாத மம்தா பானர்ஜிக்கு மாநிலத்தின் முதல்வராக நீடிக்க என்ன தகுதி இருக்கிறது? என கேள்வி எழுப்பியுள்ளார்.
ஒருவேளை குடியரசுத் தலைவர் பழங்குடியினத்தைச் சார்ந்தவர் என்பதால் மேற்கு வங்க முதல்வரும் அவரது அமைச்சர்களும் பாரபட்சமாக நடந்து கொண்டனரா? என்றும் அவர் வினவியுள்ளார்.
அதுமட்டுமன்றி ஏற்கனவே மாநாடு நடக்கவிருந்த இடத்தைக் கடைசி நேரத்தில் பல கிலோ மீட்டர் தொலைவிற்கு வேறொரு இடத்தில் மாற்றியமைத்து, சந்தால் பழங்குயின மக்களை அலைக்கழித்து, மாநாட்டிற்கு வரும் கூட்டத்தைத் திட்டமிட்டே நீர்த்துப் போகச் செய்யுமளவிற்கு பழங்குடியின மக்களின் மீது மேற்கு வங்க முதல்வருக்கு அப்படியென்ன வெறுப்பு? என்றும் கேள்வி எழுப்பியுள்ளார்.
பழங்குடியின மக்களில் இருந்து உருவான முதல் குடியரசுத் தலைவருக்கு மேற்குவங்க முதல்வர் அளிக்கும் மரியாதை இதுதானா? நமது தாய்நாட்டையும், தாய்நாட்டின் பூர்வகுடிகளையும் தங்களது தோழமைத் தலைவர்கள் தொடர்ந்து அவமானப்படுத்துவதை, சமூகநீதியின் காவலர்களாகத் தங்களை முன்னிறுத்திக் கொள்ளும் ஸ்டாலிள் உள்ளிட்ட தலைவர்கள் சகித்துக் கொண்டிருப்பது வெட்கக்கேடு என்றும் நயினார் தெரிவித்துள்ளார்.
















