ஊத்தங்கரை அருகே முதியவரை கொலை செய்துவிட்டு, மூதாட்டி பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கிருஷ்ணகிரி மாவட்டம், ஊத்தங்கரை அடுத்த ஓபகவலசை கிராமத்தை சேர்ந்த கண்ணப்பன் என்ற 70 வயதான முதியவர் மனைவி சென்னம்மாளுடன் வசித்து வந்தார்.
விவசாய தோட்டத்தில் முதிய தம்பதியினர் தனியாக வசித்த வந்த நிலையில், இரவு கண்ணப்பன் வெளியேயும், மனைவி சென்னம்மாள் வீட்டுக்குள்ளேயும் உறங்கியுள்ளனர்.
அப்போது, அங்கு வந்த மர்மநபர், வெளியே உறங்கி கொண்டிருந்த கண்ணப்பனை தலையில் பலமாக தாக்கியுள்ளார்.
கணவரின் அலறல் சத்தம் கேட்டு வெளியே வந்த சென்னம்மாளை, வீட்டுக்குள்ளே தூக்கிச் சென்று பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கியுள்ளதாகக் கூறப்படுகிறது.
இருவரின் அலறல் சத்தம் கேட்டு வந்த அக்கம்பக்கத்தினர் கண்ணப்பன் ரத்த வெள்ளத்தில் இருந்ததைக் கண்டு அதிர்ச்சியடைந்தனர்.
உடனடியாக, இருவரையும் மீட்டு அரசு ஊத்தங்கரை மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர்.
இதில், கண்ணப்பன் சிகிச்சை பலனின்றி உயிரிழந்த நிலையில், சென்னம்மாள் மேல்சிகிச்சைக்காக கிருஷ்ணகிரி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
















