ஈரானில் இனி அழிப்பதற்கு எதுவுமில்லை என்று அமெரிக்க அதிபர் ட்ரம்ப் தெரிவித்த பின்னும் மூன்றாவது வாரமாக போர் நீடித்து வருகிறது. போர் எப்போது முடியும் என்று சர்வதேசமே எதிர்ப்பார்க்கிறது. இதில் யார் வெற்றி பெறுவார்கள் ? என்ற கேள்வியும் எழுந்துள்ளது. அது பற்றிய ஒரு செய்தி தொகுப்பு.
உலகின் முதல் பெரிய பொருளாதாரமாகவும் உலகின் மிகப்பெரிய ராணுவ வலிமையுடனும் இருக்கும் அமெரிக்கா பல ஆண்டுகளாக பொருளாதார தடையால் சிரமப்பட்டுக் கொண்டிருக்கும் மிகச் சிறிய நாடான ஈரான் மீது Operation Epic Fury என்ற பெயரில் ராணுவ நடவடிக்கையைத் தொடங்கியது.
உலகின் மிக சிறந்த உளவுப் பிரிவுடன் உலகின் சிறந்த வான் பாதுகாப்பு அமைப்பான IRON DOME போன்ற அதிநவீன இராணுவத் தொழில்நுட்பங்களுடன் விளங்கும் இஸ்ரேலும், ஈரான் மீது Operation Roaring Lion என்ற பெயரில் போர் தொடுத்துள்ளது.
முதல் நாளிலேயே ஈரானின் உச்ச தலைவர் அயத்துல்லா அலி கொமேனி, அவரின் மகள், மருமகன் பேரப்பிள்ளைகள் மற்றும் பல முக்கிய இராணுவத் தலைவர்களும் கொல்லப்பட்டனர்.
தலைமையை அழித்துவிட்டால் ஈரான் சரணடைந்து விடும் என்று எண்ணிய அதிபர் ட்ரம்புக்கு முன்னை விட வேகமாக ஈரான் பதிலடி கொடுத்தது வியப்பையே தந்திருக்கும்.
ஏனெனில், உச்ச தலைவர் மரணத்துடன் முடிந்து போக ஈரான் நடத்துவது அரசியல் யுத்தமல்ல. ஈரான் வீரர்களுக்கு இது ஒரு மத யுத்தம். அதாவது “Great Satan” என்று ஈரானின் இஸ்லாமிய மதகுருக்களால் கூறப்படும் அமெரிக்காவுக்கு எதிராக செய்யும் ஜிஹாத் யுத்தமாகும்.
உண்மையில் ஈரானின் உச்ச தலைவரைக் கொன்றதைக் காரணமாக வைத்து உலகம் முழுவதும் இருக்கும் ஷியா இஸ்லாமியரை ஒருங்கிணைப்பதை ஈரான் செய்துள்ளது. உலகின் மொத்த இஸ்லாமியரில் 9 சதவீதம் மட்டுமே இருந்தாலும் ஷியா இஸ்லாமியர் உலகம் முழுவதும் வசித்து வருகிறார்கள்.
தொடர்ந்து அமெரிக்கா சார்புடைய வளைகுடா அரபு நாடுகளின் அரசுகளையும் கவிழ்த்து முழு இஸ்லாமிய உலகையும் ஈரானின் தலைமையில் ஒன்றிணைக்கும் நோக்கத்தில் ஈரான் இந்தப் போரில் ஈடுபட்டுள்ளது.
இதன் வெளிப்பாடே பாகிஸ்தான் மற்றும் ஈராக்கில் அமெரிக்கத் தூதரகங்களுக்குள் அந்நாட்டு மக்களே அத்துமீறி வன்முறையில் ஈடுபட்ட சம்பவங்களாகும்.
இதனால் தான், பதில் தாக்குதலின் முதல் குறியாக அமெரிக்காவின் 5-வது கடற்படைத் தலைமையகம் இருக்கும் ‘பஹ்ரைனை’ ஈரான் தாக்கியுள்ளது. 50 சதவீதத்துக்கும் மேல் ஷியா இஸ்லாமியர் இருந்தாலும் பஹ்ரைன் ஆட்சி அதிகாரம் சன்னி இஸ்லாமியரிடம் இருப்பது குறிப்பிடத் தக்கது.
இன்னொருபுறம் ஈரான் அனுப்பிய ஏவுகணைகள் மற்றும் ட்ரோன்கள் அனைத்தையும் இடைமறித்து அழித்ததாக அமெரிக்கா சொன்னாலும் உண்மையில் பெரும் நஷ்டம் அமெரிக்காவுக்குத்தான் என்று சொல்லப்படுகிறது.
ஈரானின் ஒரு ட்ரோனை இடைமறிக்க அமெரிக்கா சில சமயங்களில் 11 ஏவுகணைகளை செலுத்தி வருகிறது. இதனால் அமெரிக்காவுக்கு இந்தப்போரால் ஆயுத பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது.
50,000 டாலர் மதிப்புடைய ஈரானின் ஷாஹித் ஏவுகணைகளைத் தடுக்க 3 மில்லியன் டாலர் செலவழிக்கும் அதி புத்திசாலித்தனமான யுத்தத்தை அமெரிக்காவால் தான் நடத்த முடியும் என்று சர்வதேச பாதுகாப்பு வல்லுனர்கள் கூறுகின்றனர்.
மேலும் வளைகுடாவில் இருக்கும் அமெரிக்க இராணுவ தளங்கள் அனைத்துமே ஈரானின் தாக்குதலால் சிதைந்துள்ளன. வேறு துறைமுகங்களுக்கு அமெரிக்கக் கடற்படை நகர்த்தப் பட்டுள்ளது.
உலகின் 20 சதவீத எண்ணெய் மற்றும் எரிபொருள் கடல்பாதையான ஹார்முஸ் ஜலசந்தியை ஈரான் மூடிவிட்டதும், வளைகுடா நாடுகளில் உள்ள எண்ணெய் உற்பத்தி மற்றும் சுத்திகரிப்பு ஆலைகளையும் தாக்கி அழித்துள்ளது.
பதிலுக்கு ஈரானின் முக்கிய பொருளாதார அடித்தளமான கார்க் தீவில் உள்ள இராணுவ நிலையங்களை அமெரிக்கா தாக்கியுள்ளது.
11வது நாள் போரின் போது ஈரானின் மொத்த விமானப்படை மற்றும் கடற்படை உள்ளிட்டஅனைத்து இராணுவத் தளங்கள் மற்றும் ஆயுத கிடங்குகளை அழித்து விட்டதாகவும் அமெரிக்கா வெற்றி பெற்றுவிட்டதாகவும் ட்ரம்ப் அறிவித்திருந்தார்.
வான் வழி தாக்குதலால் மட்டும் எந்த நாட்டிலும் ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்த முடியாது. ஈரானில் ஆட்சி மாற்றம் நிகழ அமெரிக்கா கண்டிப்பாகத் தரைப்படை வீரர்களை ஈரானுக்குள் அனுப்ப வேண்டியிருக்கும்.
ஏற்கெனவே ஈரான் மீது போர் தொடுப்பதை 78 சதவீத அமெரிக்க மக்கள் போர் தொடங்குவதற்கு முன்பே எதிர்த்துள்ளனர். எனவே அமெரிக்கா தரைப்படையை ஈரானுக்கு அனுப்புவது ட்ரம்புக்கு உள்நாட்டில் கடும் எதிர்ப்பை ஏற்படுத்தும் என்று கூறப்படுகிறது.
ஈராக்கை லிபியாவை கைப்பற்றியது போல், வெனிசுலா அதிபரை கைது செய்தது போல் ஈரான் போர் அவ்வளவு எளிதான தல்ல என்று ட்ரம்புக்கு இப்போது புரிந்திருக்கும்.
ஈரானில் பெண்கள் மற்றும் குழந்தைகள் உட்பட 1,800-க்கும் மேற்பட்டோர் பலியாகியுள்ள இந்தப் போரில் ஈரானுக்கு வெற்றி இல்லை என்று சொன்னாலும் தோற்கடிக்க முடியாத ஈரான் அமெரிக்காவையும் இஸ்ரேலையும் வெற்றி பெறவிடாமல் வைத்திருக்கிறது.
















