அமெரிக்காவின் தேசிய பயங்கரவாத எதிர்ப்பு மையத்தின் இயக்குநர் ஜோ கென்ட், ட்ரம்பின் தவறான வெளியுறவுக் கொள்கையை எதிர்த்து தனது பதவியை ராஜினாமா செய்திருப்பது அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. ஈரான் போருக்குள் அமெரிக்கா சென்றதற்கு இஸ்ரேலே காரணம் என்று குற்றஞ்சாட்டியுள்ள ஜோ கென்ட், அதிபர் ட்ரம்ப் சுயமாக சிந்தித்து முடிவெடுக்க வேண்டும் என்று அறிவுறுத்தியுள்ளார். அது பற்றிய ஒரு செய்தி தொகுப்பு.
அதிபர் ட்ரம்புக்கு மிக நெருக்கமானவராக அறியப்பட்ட ஜோ கென்ட், அமெரிக்க தேசிய பயங்கரவாத எதிர்ப்பு மையத்தின் இயக்குனராக இருந்து வந்தார்.
அமெரிக்க அதிபருக்கும் தேசிய உளவுத் துறை இயக்குனருக்கும் ஆலோசனை வழங்கி வந்த ஜோ கென்ட் தனது பதவியில் இருந்து ராஜினாமா செய்துள்ளார்.
ஈரானால் அமெரிக்காவுக்கு உடனடி அச்சுறுத்தல் எதுவும் இல்லாத போதும் இஸ்ரேலின் அழுத்தத்தின் காரணமாகவே போர் தொடங்கப்பட்ட நிலையில், மனசாட்சிக்கு விரோதமாக தன்னால் செயல்பட முடியாது என்றும், நீண்ட யோசனைக்குப் பிறகே இந்த முடிவை எடுத்ததாக கென்ட் தனது ராஜினாமா கடிதத்தில் எழுதியுள்ளார்.
அமெரிக்க தேசிய பயங்கரவாத எதிர்ப்பு மையத்தின் இயக்குநராகப் பணியாற்றிய ஜோ கென்ட், டக்கர் கார்ல்சனுடன் பாட் காஸ்ட் நேர்காணல் நிகழ்ச்சியில் பங்கேற்று,பதவி விலகுவதற்கான காரணம் குறித்தும் ஈரான் போர் தொடர்பான தனது கருத்துக்களையும் விரிவாகவும் வெளிப்படையாகவும் பகிர்ந்துகொண்டுள்ளார்.
ஈரான் மீது போரைத் தொடங்கினால் அமெரிக்காவும் நிச்சயம் ஈரானை தாக்கும் என்ற துணிச்சலான தைரியம் இஸ்ரேலுக்கு இருந்ததால், முதலில் தாக்கியது என்றும் தொடர்ந்து அமெரிக்காவும் தாக்கியது என்றும் கென்ட் கூறியுள்ளார்.
இன்னும் இரண்டு வாரங்களில் ஈரான் அணு ஆயுதத்தை உருவாக்கி விடும் என்று ட்ரம்ப் போரை நியாயப்படுத்திய நிலையில் அப்படிப்பட்ட ஒரு சூழலே ஈரானில் இருக்கவில்லை என்று கென்ட் கூறியுள்ளார்.
2004-ஆம் ஆண்டிலிருந்து, அணு ஆயுதங்களை உருவாக்குவதைத் தடை செய்யும் ஒரு ‘ஃபத்வா’ கட்டளையை ஈரானின் இஸ்லாமிய ஆட்சி நடைமுறையில் வைத்திருப்பதாக கூறியுள்ள கென்ட் அந்த மத கட்டளையை ஈரான் மீறுவதாக எந்தவொரு உளவுத்துறைத் தகவலும் அமெரிக்காவிடம் இல்லை என்று தெரிவித்துள்ளார்.
தான் கொல்லப்பட்டால் இஸ்லாமிய ஆட்சி நிலைக்கும் என்று அறிந்திருந்ததால் அயத்துல்லா அலி கொமேனி அச்சமில்லாதவராக இருந்தார் என்று குறிப்பிட்ட கென்ட், கொமேனியைக் கொன்றது ஈரானுக்கு சாதகமாகி விட்டதாகவும், அதற்கு பிறகுதான் அமெரிக்காவை எதிர்க்கும் வேகம் இஸ்லாமிய புரட்சிகர காவல் படையினரிடம் அதிகரித்துள்ளதாகவும் கூறியுள்ளார்.
வெளிநாட்டு சக்திகளால் அதிபர் ட்ரம்ப் செல்வாக்கு செலுத்தப்பட்டதாக பதவி விலகிய ஜோ கென்ட் பொய் குற்றச்சாட்டுக்களை கூறுவதாக வெள்ளை மாளிகை நிராகரித்துள்ளது.
அமெரிக்க அதிபர் முற்றிலும் அமெரிக்காவின் நலனுக்காகவே செயல்படுவதாகவும் மற்றொரு நாட்டினால் அதிபர் கட்டுப்படுத்தப்படவில்லை” என்றும் அதிபர் ட்ரம்பின் பத்திரிகை செயலாளர் கரோலின் லீவிட், தெரிவித்துள்ளார்.
உலகின் மிகவும் சக்திவாய்ந்த ஒரு நாட்டின் அதிபரும் உலகின் மிகவும் வலிமை மிக்க அமெரிக்க இராணுவத்தின் தலைவருமான ட்ரம்ப் நாட்டின் நலனுக்கு சிறந்த முடிவுகளையே எடுப்பதாக கூறியுள்ள கரோலின் லீவிட், அதிபர் என்ன செய்ய வேண்டும் என்று யாரும் அவருக்குச் சொல்ல முடியாது என்றும் குறிப்பிட்டுள்ளார்.
















