ஹார்முஸ் ஜலசந்தியைப் பாதுகாப்பதற்கு முன்வராத நேட்டோ நாடுகளைக் கடுமையாக விமர்சித்துள்ள அமெரிக்க அதிபர் ட்ரம்ப், எதிர்காலத்தில் அந்நாடுகளுக்கு உதவி தேவைப்படும்போது அமெரிக்கா உதவாது என்று எச்சரித்துள்ளார். அது பற்றி ஒரு செய்தி தொகுப்பு.
கடந்த பிப்ரவரி மாதம் 28 ஆம் தேதி தொடங்கிய ஈரான் போர் நான்கு வாரங்களுக்கும் மேலாக தொடர்ந்து வருகிறது.
உலகின் 20 சதவீத எண்ணெய் மற்றும் எரிபொருள் விநியோகம் நடக்கும் ஹார்முஸ் ஜலசந்தியை மூடிவைத்துள்ள ஈரானின் நடவடிக்கையால் உலக அளவில் கச்சா எண்ணெய் விலை பேரலுக்கு 110 டாலரைத் தாண்டி அதிகரித்துள்ளது. வரும் ஜூன் மாதம் வரை போர் நீடித்தால் கச்சா எண்ணெய் விலை பேரலுக்கு 200 டாலரைத் தாண்டும் என்று கூறப்படுகிறது.
எண்ணெய் சந்தையில் ஏற்பட்ட பாதிப்பால் உலக பொருளாதாரமே சரிவை நோக்கிச் செல்லும் நிலையில், ஹார்முஸ் ஜலசந்தியில் பாதுகாப்பான கப்பல் போக்குவரத்துக்கு உதவ முன்வருமாறு நேட்டோ நாடுகளுக்கு அமெரிக்க அதிபர் ட்ரம்ப் அழைப்பு விடுத்திருந்தார்.
ஹார்முஸ் ஜலசந்தியைப் பாதுகாப்புக்காக கடற்படைகளை அனுப்ப வேண்டும் என்ற அமெரிக்காவின் கோரிக்கையை நேட்டோ உறுப்பு நாடுகள் நிராகரித்துள்ளன. இதுகுறித்து நேட்டோ நாடுகளை அதிபர் ட்ரம்ப் கடுமையாக விமர்சித்துள்ளார்.
ஈரானின் நடைபெற்று வரும் இஸ்லாமிய பயங்கரவாத ஆட்சிக்கு எதிரான அமெரிக்காவின் இராணுவ நடவடிக்கைக்கு நேட்டோ நாடுகள் இணையவில்லை.
நேட்டோ நாடுகளுக்கு பாதுகாப்பு வழங்கி வரும் அமெரிக்காவுக்குத் தேவைப்படும் போது அந்த நாடுகள் எந்த உதவியும் செய்வதில்லை என்றும், எதைக் கொடுக்கவும் முன்வருவதில்லை என ட்ரம்ப் குற்றம் சாட்டியுள்ளார்.
ஈரானின் ராணுவம் முழுவதுமாக அழிக்கப் பட்டு விட்டதாக கூறியுள்ள ட்ரம்ப்,அமெரிக்காவுக்கு நேட்டோ நாடுகளின் உதவி எப்போதும் தேவைப்பட்டதில்லை என்றும், இனியும் தேவைப்படாது என்றும் தெரிவித்துள்ளார்.
ஹார்முஸ் ஜலசந்தியைப் பாதுகாக்க உதவாத நேட்டோ நாடுகளின் எதிர்காலம் மோசமாக பாதிக்கப்படும் என்றும் எச்சரித்துள்ள அதிபர் ட்ரம்ப்,அமெரிக்காவுக்கு ஒத்துழைக்காத அந்நாடுகளை தாம் நினைவில் வைத்திருப்பேன் எனவும் தெரிவித்துள்ளார்.
இந்தச் சூழலில், ஈரானின் எரிசக்தி நிலையங்கள் மீதான தாக்குதலை வரும் ஏப்ரல் 6 ஆம் தேதி வரை நிறுத்திவைத்துள்ள அதிபர் ட்ரம்ப், 82வது வான்வழிப் பிரிவிலிருந்து 1,500 வீரர்களை அப்பகுதிக்கு அனுப்பி வைத்துள்ளார். மேலும் தரைவழி போரைத் தொடங்குவதற்காக கூடுதலாக 10,000 வீரர்களை மேற்காசியாவுக்கு அனுப்புவது குறித்தும் ட்ரம்ப் பரிசீலித்து வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
ஈரானின் இஸ்லாமிய புரட்சிகர காவல்படையில் சேர சுமார் ஒரு இலட்சம் இளைஞர்கள் பதிவு செய்துள்ளதாகவும், பசிஜ் உள்ளிட்ட துணை இராணுவப் படைகளிலும் ஏராளமான ஈரான் இளைஞர்கள் சேர்ந்து வருவதாகவும் கூறப்படுகிறது.
ஏற்கெனவே லெபனானில் தரைவழிப் போரை இஸ்ரேல் தொடங்கியுள்ள நிலையில், ஈரானில் தரைவழிப் போரை அமெரிக்கா தொடங்கினால்,தாங்களும் நேரடிப் போரில் ஈடுபடப் போவதாக ஏமனில் உள்ள ஈரான் ஆதரவு பெற்ற ஹவூதி பயங்கரவாத அமைப்பு கடந்த வெள்ளிக்கிழமை அறிவித்துள்ளது.
இதற்கிடையே அமெரிக்க துணை அதிபர் ஜேடி வான்ஸ் தலைமையிலான குழுவினருடன் ஒப்பந்தம் செய்ய ஈரான் முன்வராவிட்டால் அந்நாடு மிக மோசமான விளைவுகளை சந்திக்கும் என அதிபர் ட்ரம்ப் எச்சரித்துள்ளார்.
















