சேலம் மாவட்டம் வீரபாண்டி தொகுதியில் திமுக சார்பில் போட்டியிடும் வேட்பாளர் டாக்டர் தருணுக்கு எதிராக கட்சி நிர்வாகிகள் போர்க்கொடி தூக்கியுள்ளனர்.
வீரபாண்டி தொகுதியில் திமுக சார்பில் போட்டியிட வீரபாண்டி ஆறுமுகத்தின் குடும்பத்தினர், ஒன்றியச் செயலாளர் வெண்ணிலா சேகர், மற்றும் மாவட்ட துணைச் செயலாளர் பாரப்பட்டி சுரேஷ்குமார் ஆகியோர் விருப்ப மனு அளித்திருந்தனர்.
ஆனால், கடந்த முறை போட்டியிட்டு தோல்வியடைந்த டாக்டர் தருண் என்பவருக்கு மீண்டும் திமுக தலைமை வாய்ப்பளித்துள்ளதால் நிர்வாகிகள் அதிர்ச்சியடைந்தனர்.
அதன் எதிரொலியாக வீரபாண்டி ஒன்றிய செயலாளர் வெண்ணிலா சேகர் தனது பதவியை ராஜினாமா செய்தார். இந்நிலையில், சேலம் கிழக்கு மாவட்ட திமுக துணைச் செயலாளர் பாரப்பட்டி சுரேஷ் குமார் தலைமையில் 100க்கும் மேற்பட்ட கிளைச் செயலாளர் ராஜினாமா கடிதத்துடன், மாவட்டச் செயலாளர் சிவலிங்கம் வீட்டின் முன் முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர்.
















