பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப்பின் உதவியாளர், லஷ்கர்-இ-தொய்பா அமைப்பின் தலைவரின் மகனுடன் எடுத்துக்கொண்ட புகைப்படம் வெளியாகி சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
பாகிஸ்தானைத் தளமாகக் கொண்டு செயல்படும் லஷ்கர்-இ-தொய்பா பயங்கரவாத அமைப்பின் நிறுவனர் ஹாஃபிஸ் சயீத். 2008ம் ஆண்டு மும்பையில் நடைபெற்ற பயங்கரவாத தாக்குதலுக்கு இவர்தான் மூளையாக செயல்பட்டார். அந்த தாக்குதலால் 160க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டனர். இதன் காரணமாக, ஐக்கிய நாடுகள் சபை இவரை சர்வதேச பயங்கரவாதியாக அறிவித்துள்ளது. மேலும், இவர் குறித்த தகவல்களை வழங்குபவர்களுக்கு அமெரிக்கா சுமார் 83 கோடி ரூபாய் சன்மானம் அறிவித்துள்ளது.
இப்படிப்பட்ட பயங்கரவாதியின் மகன்தான் ஹாஃபிஸ் தல்கா சயீத். அவரும் தேடப்படும் பயங்கரவாதியாகத்தான் உள்ளார். அவருடன், பாகிஸ்தான் பிரதமரின் உதவியாளரான ராணா இஹ்சான் அஃப்சல் கான், திருமண நிகழ்வில் ஒன்றாக பங்கேற்றுள்ளார். மேலும், அவருடன் கைக்குலுக்கி பரஸ்பரம் நலமும் விசாரித்துள்ளார்.
இது பாகிஸ்தான் அரசுக்கும், பயங்கரவாதிகளுக்கும் இடையேயான நெருங்கிய தொடர்பை மீண்டும் ஒருமுறை உலகிற்கு வெளிச்சம் போட்டு காட்டியுள்ளது.
















