தேசிய ஜனநாயக கூட்டணியை பார்த்து முதல்வர் பயத்தில் உள்ளதாக தமிழக பா.ஜ.க தலைவர் நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார்.
சாத்தூர் தொகுதி பாஜக வேட்பாளர் நயினார் நாகேந்திரன் தீப்பெட்டி உற்பத்தியாளர்களுடன் கலந்துரையாடினார். அப்போது பேசிய அவர், கடந்த 2001 முதல் 2006ம் ஆண்டு வரை திருநெல்வேலியில் வெற்றி பெற்று, தாம் அமைச்சராக இருந்தபோது பல தொழிற்சாலைகள் கொண்டு வந்ததை நினைவு கூர்ந்தார்.
இங்கு பிரதான தொழிலாக உள்ள தீப்பெட்டி மற்றும் பட்டாசு தொழில் நன்றாக நடந்தால் தான் பொதுமக்களுக்கு வேலை கொடுக்க முடியும் என்றும் குறிப்பிட்டார். எனவே, மத்திய அமைச்சர்களின் உதவியோடு சாத்தூரின் தொழில் வளர்ச்சிக்காக பாடுபடுவதாகவும் வாக்குறுதி அளித்தார்.
இதைத்தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய நயினார் நாகேந்திரன், தேசிய ஜனநாயக கூட்டணியை பார்த்து முதல்வர் பயத்தில் நடுங்கி போய் உள்ளதாக விமர்சித்தார். திமுகவும், தேசிய கட்சி ஒன்றுடன் தான் பயணிப்பதாகவும், தி.மு.க ஏன் தனித்துப் போட்டியிடவில்லை என்றும் கேள்வி எழுப்பினார்.
















