மேற்கு வங்கத் தேர்தலையொட்டி அம்மாநிலத்துக்கான பாஜகவின் தேர்தல் அறிக்கையை மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா கொல்கத்தாவில் வெளியிட்டுள்ளார். அதில் பாஜக ஆட்சிக்கு வந்தால் மாதம் தோறும் பெண்களுக்கு 3000 ரூபாய் வழங்கப்படும் என்றும், ஆறு மாதங்களுக்குள் பொது சிவில் சட்டம் அமல்படுத்தப்படும் என்றும் அறிவிக்கப் பட்டுள்ளது. அது பற்றி இந்தச் செய்தி தொகுப்பில் பார்க்கலாம்.
கடந்த 9ம் தேதி அசாம், கேரளா, புதுச்சேரி ஆகிய மாநிலங்களில் சட்டமன்றத் தேர்தல் நடந்தது. வரும் ஏப்ரல் 23ம் தேதி தமிழ்நாட்டில் வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது. மேற்குவங்கத்தில் ஏப்ரல் 23, 29 ஆகிய தேதிகளில் இரண்டு கட்டங்களாக தேர்தல் நடைபெற உள்ளது.
மேற்கு வங்கத்தில் மூன்றாவது முறையாக ஆட்சியில் இருக்கும் மம்தா பானர்ஜி நான்காவது முறையாக ஆட்சியைத் தக்க வைத்துக் கொள்ள தீவிரப் பிரச்சாரத்தை மேற்கொண்டுள்ளது. மேற்குவங்கத்தில் ஆக்கப்பூர்வமான எதிர்கட்சியாக செயல்பட்டு வரும் பாஜக முதல் முறையாக ஆட்சியைக் கைப்பற்ற தீவிரமாக செயல்பட்டு வருகிறது.
ஒரு மாநிலத்தின் எதிர்காலத்தை வடிவமைப்பதில் அம்மாநில மக்களின் பங்களிப்பு முக்கியமானது என்பதால் மாநிலம் முழுவதும் வீடு வீடாக சென்று பொதுமக்களின் பிரச்சனைகளையும் எதிர்பார்ப்புகளையும் கேட்டறிந்து அவர்களிடமிருந்து 8 லட்சத்துக்கும் அதிகமான ஆலோசனைகளைப் பெற்று பாஜக தனது தேர்தல் அறிக்கையை ஒரு சமூக ஒப்பந்தமாக தயாரித்து உள்ளது.
இதன் தொடர்ச்சியாக கொல்கத்தாவில் பாஜகவின் தேர்தல் அறிக்கையை அக்கட்சியின் மூத்த தலைவரும் மத்திய உள்துறை அமைச்சருமான அமித் ஷா வெளியிட்டுள்ளார்.
மேற்கு வங்கத்தில் வாழும் ஒவ்வொரு பிரிவினரிடமும் பாஜக கொண்டுள்ள அர்ப்பணிப்பைப் பாஜகவின் தேர்தல் அறிக்கை பிரதிபலிப்பதாக கூறியுள்ள அமித் ஷா, பாஜகவின் “சங்கல்ப் பத்ரா” மக்களின் நம்பிக்கையை மீட்டெடுப்பதை நோக்கமாகக் கொண்டிருப்பதாக தெரிவித்துள்ளார்.
மேலும், பிரதமர் மோடியின் இலட்சியக் கனவான வளர்ச்சியடைந்த இந்தியாவுக்கான வரைபடம் தான் இந்த தேர்தல் அறிக்கை என்றும் குறிப்பிட்டுள்ளார்.
முதலமைச்சர் மம்தா பானர்ஜியின் தலைமையிலான திரிணாமுல் காங்கிரஸின் 15 ஆண்டுகால ஆட்சியை இருண்ட காலம் என்று விமர்சித்த அமித் ஷா, மேற்கு வங்க மக்கள் அச்சத்துடன் இருப்பதாகவும், மாற்றத்தை விரும்புவதாகவும் கூறியுள்ளார்.
ஒவ்வொரு மாதமும் 1-ஆம் தேதியிலிருந்து 5-ஆம் தேதிக்குள் அனைத்து பெண்களின் வங்கிக்கணக்கில் 3,000 ரூபாய் பாஜக அரசு நேரடியாகச் செலுத்தும் என்றும். பெண்களுக்குத் தற்காப்பு பயிற்சிகள் வழங்க துர்கா சுரக்சா குழு ஏற்படுத்தப்படும் என்றும் தெரிவிக்கப் பட்டுள்ளது.
ஆயுஷ்மான் பாரத், கரீப் கல்யாண் யக்ஞா உள்ளிட்ட மத்திய அரசின் அனைத்து மக்கள் நலத்திட்டங்களையும் மேற்குவங்கத்தில் முழுமையாகச் செயல்படுத்தப்படும் என்றும் பாஜக தேர்தல் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
அனைத்து அரசு ஊழியர்களுக்கும் ஓய்வூதியதாரர்களுக்கும் அகவிலைப்படி கிடைப்பது உறுதி செய்யப்படும் என்றும், ஆட்சி அமைத்த 45 நாட்களுக்குள் 7-வது ஊதியக் குழுவின் பரிந்துரைகள் அமல்படுத்தப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
குர்மாலி மற்றும் ராஜ்போங்ஜி சமூகங்களை பட்டியலிடப்பட்ட பழங்குடியினமாக இந்திய அரசியல் அமைப்பின் 8 வது அட்டவணையில் சேர்க்கப்படும் என்றும், வந்தே மாதரம் அருங்காட்சியகம் அமைக்கப்படும் என்றும் கூறப்பட்டுள்ளது.
அடுத்த 5 ஆண்டுகளில் ஒரு கோடி வேலை வாய்ப்புகள் உருவாக்கப்படும் என்றும், மாநில அரசு வேலைவாய்ப்புகளில் பெண்களுக்கு 33 சதவீத இட ஒதுக்கீடு வழங்கப்படும் என்றும் கூறப்பட்டுள்ளது.
ஆட்சிக்கு வந்த ஆறு மாதங்களுக்குள், வங்கத்திலும் பொது சிவில் சட்டம் நடைமுறைப் படுத்தப்படும் என்றும், சட்டவிரோத ஊடுருவல் மற்றும் பசு கடத்தல் தடுக்கப்படும் என்றும் மணல் கடத்தலைத் தடுக்க சிறப்பு அதிரடி படை உருவாக்கப்படும் என்றும் கூறப்பட்டுள்ளது. இதில் zero tolerance என்ற அணுகுமுறை கடைப்பிடிக்கப்படும் என்றும் உறுதியளிக்கப் பட்டுள்ளது.
கட்சி வித்தியாசமில்லாமல் கடந்த காலங்களில் மேற்கு வங்கத்தில் நடந்த அரசியல் வன்முறைகள் குறித்து ஓய்வுபெற்ற உச்ச நீதிமன்ற நீதிபதி தலைமையில் ஆணையம் அமைத்து விசாரணை நடத்தப்பட்டு தண்டனை வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ள பாஜக தேர்தல் அறிக்கையில் ஊழல் ஒழிப்பு, அரசியல் வன்முறைத் தடுப்பு மற்றும் சட்டம்-ஒழுங்கை மீட்டெடுத்தல் ஆகிய மூன்று முக்கிய அம்சங்கள் குறித்து, மூன்று ‘வெள்ளை அறிக்கைகள்’ (White Papers) வெளியிடப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் மாநிலத்தில் சட்டம் – ஒழுங்கு மிக்க ஊழலற்ற ஆட்சி வழங்கப்படும் என்றும் உறுதியளிக்கப்பட்டுள்ளது.
மம்தா பானர்ஜியின் ஆட்சியில் இழந்த பெருமையை மேற்கு வங்கம் மீட்டெடுப்பதற்கான ஒரு அடையாளமாக வரும் ஏப்ரல் 15 முதல் மே 9ம் தேதி வரையிலான காலக் கட்டத்தை மேற்கு வங்கத்துக்கான தொலைநோக்கு செயல் திட்ட காலமாக பாஜக வகுத்துள்ளது.
















