வடகிழக்கு பருவமழை தொடங்கிய நிலையில், சென்னையின் பல்வேறு பகுதிகளில் பரவலாக மழை பெய்தது.
சென்னை எழும்பூர், திருவல்லிக்கேணி, நுங்கம்பாக்கம், தேனாம்பேட்டை, அண்ணாநகர், வேளச்சேரி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் நேற்றிரவு தொடங்கி காலை வரை விட்டு விட்டு மழை பெய்தது. சில இடங்களில் மழைநீர் தேங்கியதால் வாகன ஓட்டிகள் அவதிக்குள்ளாகினர்.
இதேபோல் முதலமைச்சர் ஜோசப் விஜயின் சொந்த தொகுதியான பெரம்பூரில், சிறிது நேர மழைக்கே சாலைகளில் தண்ணீர் தேங்கியதால், வாகன ஓட்டிகளும் பொதுமக்களும் சிரமத்திற்கு ஆளாகினர்.
இதனால் ஆட்சி மாறியும், மழைநீர் தேங்கும் அவலம் மட்டும் மாறவில்லை என அப்பகுதி மக்கள் வேதனை தெரிவிக்கின்றனர். மேலும், மழைக்காலங்களில் வீதிகளில் தண்ணீர் தேங்குவதுடன், வீடுகளுக்குள்ளும் மழைநீர் புகுவதாகக் குற்றம்சாட்டும் மக்கள், மழைநீர் வடிகால் வசதிகளை முறையாகச் சீரமைத்து நிரந்தரத் தீர்வு காண வேண்டும் எனக் கோரிக்கை விடுத்துள்ளனர்.
வடசென்னை பகுதிகளான வண்ணாரப்பேட்டை, தண்டையார்பேட்டை, ராயபுரம், காசிமேடு, திருவொற்றியூர் உள்ளிட்ட இடங்களில் மழை பெய்தது. வண்ணாரப்பேட்டை எம்.சி. ரோடு பகுதியில் பெய்த கனமழையால் சாலையில் தண்ணீர் தேங்கியது. அந்த பகுதியில் உள்ள ஜவுளி கடைகள் மற்றும் ஜவுளி சேமிப்பு கிடங்குகளுக்குள் மழைநீர் புகுந்ததால் வியாபாரிகள் அவதிக்குள்ளாகினர்.
வண்ணாரப்பேட்டை பகுதியில் 25 கோடி ரூபாய் மதிப்பீட்டில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் பணிகள் மேற்கொள்ளப்பட்டதாக கூறப்படும் நிலையில், ஒருமணி நேர மழைக்கே தண்ணீர் தேங்குவதால் மழைநீர் வடிகால் வசதி குறித்து வியாபாரிகள் கேள்வி எழுப்பினர்.
















