இன்னும் 20 ஆண்டுகளில் வேலைக்குச் செல்வது கட்டாயமாக இருக்காது என்றும், விருப்ப தேர்வாக மாறிவிடும் என்றும் உலகின் பெரும் பணக் காரர்களில் ஒருவரும், ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனத்தின் தலைவருமான எலான் மஸ்க் தெரிவித்துள்ளார். அதுபற்றிய ஒரு செய்தி தொகுப்பு.
இந்தியாவின் மிகப் பிரபலமான பாட்காஸ்ட் என்றால் அது Zerodha-வின் இணை நிறுவனர் நிகில் காமத் நடத்தும் ‘WTF is?’ என்ற நிகழ்ச்சி தான். பிரதமர் மோடி உட்பட பல பிரபலங்கள் இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்டு தங்கள் கருத்துக்களைப் பகிர்ந்திருக்கிறார்கள். சமீபத்தில், நிகில் காமத் PODCAST நிகழ்ச்சியில், ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனத் தலைவர் எலான்மஸ்க் கலந்து கொண்டார்.
சுமார் 2 மணி நேரத்துக்கும் மேலான இந்நிகழ்ச்சியில், வேலைகள் எதிர்காலத்தில் வேலை வாய்ப்புகள், அமெரிக்க குடியேற்றக் கொள்கைகள், H 1B விசாக்கள், ட்ரம்பின் வரிக் கொள்கைகள், AI வளர்ச்சி உள்ளிட்ட பல்வேறு விஷயங்கள் குறித்தும் முக்கியமான தகவல்களை பகிர்ந்துள்ளார் எலான் மஸ்க்.
இந்தப் பாட்காஸ்ட் நிகழ்ச்சி சமூக ஊடகங்களில் வைரலாகி புது ட்ரெண்டாகி உள்ளது. பல ஆண்டுகளாகத் திறமையான இந்தியர்களைப் பணியமர்த்துவதன் மூலம் அமெரிக்கா பெருமளவில் பயனடைந்துள்ளது என்று கூறிய எலான் மஸ்க், இன்றும் கடினமான பணிகளைச் செய்யப் போதுமான திறமையானவர்களைக் கண்டுபிடிப்பதில் நிறைய சிரமங்கள் இருப்பதாக ஒப்புக்கொண்டுள்ளார்.
மற்ற நாடுகளைச் சேர்ந்தவர்களால் அமெரிக்கர்களின் வேலைகள் பறிக்கப்படுவது என்ற குற்றச்சாட்டின் உண்மைத்தன்மை பற்றித் தமக்கு எதுவும் தெரியாது என்று கூறிய எலான் மஸ்க், சில நேரங்களில் தவறாகப் பயன்படுத்தப்பட்டுள்ளது என்பதாலேயே, H-1B விசா திட்டத்தையே நிறுத்துவதில் தமக்கு உடன்பாடு இல்லை என்றும் குறிப்பிட்டுள்ளார்.
வரிகள் விதிப்பதை அமெரிக்க அதிபர் ட்ரம்ப் விரும்புவதாகத் தெரிவித்த எலான் மஸ்க், அதைத் தடுக்க முயன்று தோல்வி அடைந்ததாகக் கூறியுள்ளார். மேலும் இந்தியா மீது 50 சதவீத வரிவிதிப்பு தவறானது என்றும் இந்நிகழ்ச்சியில் எலான் மஸ்க் பதிவு செய்துள்ளார். இன்னும் 20 ஆண்டுகளில் மனிதர்களுக்கு வேலையே இருக்காது என்றும், அனைத்தையும் AI-யே அனைத்தையும் பார்த்துக் கொள்ளும் எனக் கூறியுள்ள எலான் மஸ்க், வேலைக்காகப் பெரிய நகரங்களில் வசிக்க வேண்டிய கட்டாயமும் இருக்காது என்றும் தெரிவித்துள்ளார்.
எதிர்காலத்தில் வேலை செய்வது விருப்பத்திற்குரியதாக மட்டுமே இருக்கும் என்பது தனது கணிப்பு என்றும் மஸ்க் குறிப்பிட்டுள்ளார். இந்தியாவை சேர்ந்த இளம் தொழில் முனைவோர் எந்த விஷயங்களில் கவனம் செலுத்த வேண்டும் என்ற கேள்விக்கு எலான் மஸ்க் அளித்துள்ள பதில் வழிகாட்டியாக அமைந்துள்ளது.
பெரும் பணக்காரராக வேண்டுமென்ற நோக்கத்தில் தொழிலில் இறங்காமல், மக்களுக்கு உண்மையான வேல்யூ கொடுக்கக் கூடிய சேவையை அல்லது பொருளை கொடுக்கும் போது, செல்வம் தானாக தேடிவரும் என்றும், மேலும் உண்மையான வெற்றி என்பது வரக்கூடிய பணத்தில் கணிசமான தொகையை மீண்டும் சமூகத்துக்காகக் கொடுக்க வேண்டும் என்றும் குறிப்பிட்டுள்ளார். எலான் மஸ்க் மற்றும் நிகில் காமத் இடையே நடந்த PODCAST உரையாடல் ஒரு விழிப்புணர்வு மற்றும் உலகின் உலகின் பெரும் பணக்காரரின் சிந்தனையை உலக மக்களிடம் கொண்டு சேர்த்திருக்கிறது.
















