பின்னலாடைக்கு பெயர் போன திருப்பூர் குப்பை நகரமாக மாறிவிடுமோ என்று அச்சத்தில் உள்ளனர் அப்பகுதி மக்கள்…. திடக்கழிவு மேலாண்மை திட்டம் பெயரளவில் உள்ளதாலும், குப்பைகள் ஆங்காங்கே கொட்டப்படுவதாலும் திருப்பூரில் சுகாதார சீர்கேடு தலைவிரித்தாடுகிறது… இது குறித்த செய்தித்தொகுப்பை தற்போது பார்க்கலாம்.
பின்னலாடை மூலம் அந்நிய செலாவணியை அள்ளிக் கொடுக்கும் திருப்பூரில் இந்த நிலைமை. சாலையோரங்களில் எங்குப் பார்த்தாலும் மலை போல் டன் கணக்கில் தேங்கிக் கிடக்கும் குப்பைகள், திருப்பூர் மாநகராட்சியின் அவலத்தை வெளிச்சம் போட்டுக் காட்டுகின்றன.
இந்தியாவின் டாலர் சிட்டி என வர்ணிக்கப்பட்ட திருப்பூர், திமுக மேயர் தினேஷ்குமாரின் அலட்சியத்தாலும், செயல்படாத மாநாகராட்சி நிர்வாகத்தாலும், குப்பை நகரமாக மாறி வருகிறது.. மாநகராட்சியில் சேகரமாகும் குப்பைகள், முதலில் காளம்பாளையத்தில் பயன்படாத பாறை பள்ளத்தில் கொட்டப்பட்டு வந்த நிலையில், அப்பகுதி முழுவதும் துர்நாற்றம் வீசியதால் பொதுமக்கள் அங்கு குப்பைகளை கொட்ட எதிர்ப்பு தெரிவித்தனர்.
மக்களின் போராட்டம் காரணமாக வேலம் பாளையம், பின்னர் முதலிபாளையம், பின்னர் இச்சிப்பட்டி இறுதியாகச் சின்னக்காரி பாளையம் எனக் குப்பை கொட்டும் இடம் மாறியதே தவிர, உருப்படியான திட்டங்களை மாநகராட்சி செயல்படுத்தவில்லை என்கிறார்கள் பாதிக்கப்பட்டடவர்கள்.
இதுபோதாது என்று நொய்யல் ஆற்றின் கரையோரங்களிலும் மாநகராட்சி, குப்பைகளை கொட்டி வருவதால், சுற்றுச்சூழல் சீர்கெட்டுள்ளதாகப் பொதுமக்கள் குற்றம்சாட்டுகின்றனர் திருப்பூர் மாநகராட்சியில் நாள்தோறும் 700 டன் குப்பைகள் சேகரிக்கப்படும் நிலையில், அதிமுக ஆட்சிக்காலத்தில் திடக்கழிவு மேலாண்மை திட்டம் திறம்பட செயல்படுத்தப்பட்ட காரணத்தால், பொதுமக்கள் இடையூறுகளைச் சந்திக்கவில்லை.
ஆனால் கடந்த நான்கு ஆண்டுகால திராவிட மாடல் ஆட்சியில் திடக்கழிவு மேலாண்மை திட்டம் என்றால் என்ன என்று கேட்கும் அளவுக்குத் திருப்பூர் குப்பைகளால் நிரம்பியுள்ளதாகப் பொதுமக்கள் குற்றம்சாட்டுகின்றனர். திருப்பூரை குப்பை நகரமாக மாற்றியுள்ள மாநகராட்சி நிர்வாகம், திடக்கழிவு மேலாண்மை திட்டத்தைச் செயல்படுத்தி குப்பைகளை உடனடியாக அகற்ற வேண்டும் என்பதே திருப்பூர் மக்களின் கோரிக்கையாக உள்ளது.
















