கூடங்குளம் அணுமின் நிலையத்தில் உள்ள 6 அணு உலைகளும் முழுமையான செயல்பாட்டுக்குக் கொண்டுவரப்படும் என ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின் தெரிவித்துள்ளார். இதன் மூலம் அணுஉலை அமைக்கும் பணிகள் புதிய வேகம் பெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இந்தியாவில் மிகப்பெரிய அணுமின் நிலையமாக இருப்பது தமிழகத்தில் திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள கூடங்குளம் அணுமின் நிலையம்தான்… இங்குள்ள 6 அணுமின் நிலையங்களில் இரண்டு ஏற்கனவே செயல்பாட்டில் உள்ள நிலையில், 6 அணுமின் நிலையங்களையும் முழுமையாகப் பயன்பாட்டுக்குக் கொண்டுவர ரஷ்யா உறுதியளித்துள்ளது.
டெல்லியில் பிரதமர் நரேந்திர மோடி, ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின் இருவரும் கூட்டாகச் செய்தியாளர்களைச் சந்தித்தபோது, புதின் இந்த உறுதியை அளித்திருக்கிறார். அதன்படி இந்தியாவின் மிகப்பெரிய அணுமின் நிலையமான கூடங்குளத்தை கட்டுவதற்கான முதன்மை திட்டத்தைச் செயல்படுத்தி வருவதாகக் கூறினார்.
ஆறு அணு உலைகளில் இரண்டு ஏற்கனவே எரிசக்தி வலையமைப்புடன் இணைக்கப்பட்டுள்ளதாகக் கூறிய புதின், கட்டுமானத்தில் உள்ள 4 அணு உலைகளிலும் முழுமையான மின் உற்பத்திக்குக் கொண்டு வருவதாக இந்தியாவின் எரிசக்தி தேவையில் முக்கிய பங்களிப்பை வழங்கும் என்றும் தெரிவித்தார்.
கூடங்குளம் அணுமின் நிலையத்தில் உள்ள 3வது உலையைச் செயல்படுத்துவதற்கான அணு எரிபொருளின் முதல் தொகுதி வழங்கப்பட்டதை ரஷ்யாவின் அரசு அணுசக்தி நிறுவனமான ரோசாட்டம் அறிக்கை வெளியிட்ட நிலையில், ரஷ்யா அதிபர் புதின் பேச்சு அப்பணிகளை முடுக்கிவிட்டுள்ளது.
அதுமட்டுமன்றி, சிறிய அணு உலைகள், மிதக்கும் அணுமின் நிலையங்கள் மற்றும் மருத்துவம் அல்லது விவசாயம் போன்ற அணு தொழில்நுட்பங்களின் ஆற்றல் அல்லாத பயன்பாடுகள் குறித்தும் இரு தலைவர்கள் விரிவாக ஆலோசித்தனர்.
முன்னதாக, பேசிய ரஷ்ய அதிபர் புதின், ரஷ்யா, பெலாரசில் இருந்து இந்திய பெருங்கடல் வழியே சர்வதேச வடக்கு-தெற்கு போக்குவரத்து வழித்தடம் துவங்கப்படும் என்று தெரிவித்தார்.
இந்தியாவிற்கு தங்கள் நாடு தொடர்ந்து கச்சா எண்ணெயை வழங்கும் என்றும், இருநாடுகளுக்கு இடையே கடந்த ஆண்டு 6.20 லட்சம் கோடி ரூபாய் மதிப்பில் வர்த்தகம் நடைபெற்றுள்ளதாகக் கூறினார். மேலும் இந்தியா – ரஷ்யா இடையேயான பாதுகாப்புத்துறை ஒப்பந்தம் திருப்தியாக இருந்தது என்று ரஷ்ய அதிபர் புதின் குறிப்பிட்டுள்ளார்.
















