தமிழகத்தில் மஞ்சள் விளைச்சலின் தலைநகராகத் திகழும் ஈரோட்டில் நவீன மஞ்சள் ஆராய்ச்சி நிலையமும், அரசு வேளாண் கருவிகள் உற்பத்தித் தொழிற்பேட்டையும் அமைக்கப்படும் என்று சொன்னீங்களே, செஞ்சீங்களா முதல்வர் ஸ்டாலின்? என்று பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் கேள்வி எழுப்பி உள்ளார்.
இது குறித்து அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில்,
மஞ்சள் உற்பத்தியைப் பெருக்குவதிலும், விளைந்த மஞ்சளுக்கான உரிய விலையை நிர்ணயிப்பதிலும் சுணக்கம் காட்டி வரும் திமுக அரசு, மஞ்சள் ஆராய்ச்சி நிறுவனம் அமைக்க வேண்டும் என்ற அப்பகுதி விவசாயிகளின் நீண்டநாள் கோரிக்கையையும் உதாசீனப்படுத்துவது எந்த வகையில் நியாயம்? இத்தனைக்கும் கடந்த தேர்தலின் போது திமுக அளித்த வாக்குறுதி தானே இது? என்று நயினார் நாகேந்திரன் கேள்வி எழுப்பி உள்ளார்.
உலகப்புகழ்பெற்ற ஈரோட்டு மஞ்சளுக்கு சர்வதேச சந்தையில் தனி அடையாளம் கிடைக்கும் விதமாகப் புவிசார் குறியீடு வழங்கி கௌரவித்தது நமது மத்திய அரசு. ஆனால், உலகம் முழுவதும் ஏற்றுமதியாகும் மஞ்சளை விளைவிக்கும் ஈரோட்டு விவசாயிகளைத் தொடர்ந்து வஞ்சித்து வருகிறது திமுக அரசு என்று நயினார் நாகேந்திரன் குற்றம் சாட்டி உள்ளார்.
இதுமட்டுமன்றி விவசாயத்திற்குத் தேவையான நவீன கருவிகளுக்காக வெளிநாடுகளையும், வெளி மாநிலங்களையுமே தமிழக விவசாயிகள் சார்ந்திருக்கும் நிலையில், வேளாண் கருவிகள் உற்பத்தித் தொழிற்பேட்டை அமைக்கப்படும் என்ற வாக்குறுதியையும் கடந்த நான்கரை ஆண்டுகளாகக் கிடப்பில் போட்டு விவசாயிகளை வஞ்சிப்பது ஏன்? நாட்டின் முதுகெலும்பான விவசாயப் பெருமக்களை இப்படி நம்பவைத்து ஏமாற்றுவது தான் நாடு போற்றும் நல்லாட்சியின் லட்சணமா? என்று நயினார் நாகேந்திரன் கேள்வி எழுப்பி உள்ளார்.
















