இரண்டாம் கட்ட ஆப்ரேஷன் சிந்தூர் நடவடிக்கை தவிர்க்க முடியாதது என்றும், அதற்கு இந்தியா தயாராக வேண்டும் என்றும் Land Warfare Studies மையத்தின் இயக்குனரும் ஓய்வுபெற்ற இந்திய ராணுவ அதிகாரியும் ஆன லெப்டினன்ட் ஜெனரல் துஷ்யந்த் சிங் தெரிவித்துள்ளார். அதுபற்றிய ஒரு செய்தி தொகுப்பு.
1968 ஆம் ஆண்டு அக்டோபர் மாதத்தில் நிர்மல் ஜித் சிங் ஷெகோன், “பறக்கும் தோட்டாக்கள்” என்று அழைக்கப்படும் 18ம் எண் படைப்பிரிவில் விமானியாக நியமிக்கப்பட்டார். 1971 ஆம் ஆண்டு இந்திய-பாகிஸ்தான் போர் தொடங்கியது. இருநாடுகளுக்கும் இடையேயான எல்லை போர்க்களமாக மாறியது. அப்போது ஸ்ரீநகரை தளமாகக் கொண்ட க்னாட் பிரிவின் விமானியாக ஷெகோன் களத்தில் துணிச்சலுடன் செயல்பட்டார்.
1971ஆம் ஆண்டு டிசம்பர் 14ம் தேதி, பதான்கோட், ஸ்ரீநகர் மற்றும் அமிர்தசரஸ் விமானநிலையங்களை நோக்கி, பாகிஸ்தான் விமானப்படை இடைவிடாத தாக்குதல்களை நடத்திய போதும் துணிச்சலாக எதிர்கொண்டு, நாட்டுக்காகத் தன்னுயிரை நிர்மல் ஜித் சிங் ஷெகோன் தியாகம் செய்தார். பரம் வீர் சக்ரா விருதால் கௌரவிக்கப்பட்ட பெற்ற ஒரே இந்திய விமானப்படை அதிகாரி என்ற பெருமையைப் பெற்ற நிர்மல் ஜித் சிங் ஷெகோன் வீரத்தைப் போற்றும் வகையில் ஆண்டுதோறும் இந்திய விமானப்படை நினைவுச் சொற்பொழிவுகள் நடத்தி வருகிறது.
இந்த ஆண்டு, குஜராத் கிளையின் விமானப்படை சங்கத்தால் ஏற்பாடு செய்யப்பட்ட நிகழ்வில் கலந்துகொண்ட ஓய்வுபெற்ற இந்திய ராணுவ அதிகாரியான லெப்டினன்ட் ஜெனரல் துஷ்யந்த் சிங், ஆப்ரேஷன் சிந்தூர் முடிவு அல்ல, புதிய வியூகத்தின் தொடக்கம் என்று கூறியுள்ளார். சீனா மற்றும் துருக்கியின் ஆதரவுடன் காஷ்மீர் மீது பாகிஸ்தான் அதிக கவனம் செலுத்திவருவதால், இன்னொரு ஆப்ரேஷன் சிந்தூர் தவிர்க்க முடியாதது என்று கூறிய துஷ்யந்த் சிங், அதற்காக இந்திய இராணுவம் தயாராக வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளார்.
பாகிஸ்தானின் பலவீனங்களை அம்பலப்படுத்திய ஆபரேஷன் சிந்தூரின் வெற்றி, பயங்கரவாத அமைப்புகளை ஒடுக்குவதில் இந்தியா எந்தவித கட்டுப்பாடும் இல்லாமல் அணு ஆயுத வரம்புக்குக் கீழே செயல்படுவதற்கான உறுதியையும் நிரூபித்தது என்று கூறியுள்ளார். 1971 போருக்குப் பிறகு முதல் முறையாக, நாட்டின் முப்படைகளின் சினெர்ஜி மேம்படுத்தப்பட்டதாகவும் அரசியல் தெளிவு, ராணுவ துல்லியம், வான் பாதுகாப்பு என ஆப்ரேஷன் சிந்தூர் உலகத்தையே ஆச்சரியப்படுத்தியது என்று பெருமிதத்துடன் குறிப்பிட்டுள்ளார். ஆப்ரேஷன் சிந்தூர் நடந்த 4 நாட்களில், அரசின் இணைய தளங்கள் மீதான சைபர் தாக்குதல்கள் ஏழு மடங்கு அதிகரித்தது என்று குறிப்பிட்ட சிங், மின்சாரத் துறை கிட்டத்தட்ட இரண்டு லட்சம் சைபர் தாக்குதல்களைச் சந்தித்தது என்றும், தேசிய பங்குச் சந்தை சுமார் 40 கோடி சைபர் தாக்குதல்களைச் சந்தித்தது என்றும் ஆனால், இந்திய ராணுவமும் இந்தத் தாக்குதல்களை முற்றிலுமாக இடைமறித்து அழித்தது என்றும் துஷ்யந்த் சிங் கூறியுள்ளார்.
பாகிஸ்தானும், சீனாவும் சமூக ஊடகங்களில் எதிர்-கதைகளை தீவிரமாகப் பரப்புகின்றன என்பதைச் சுட்டிக் காட்டிய லெப்டினன்ட் ஜெனரல் துஷ்யந்த் சிங், தகவல்தொடர்புகளை மேம்படுத்துவதற்கும் தவறான தகவல்களைத் திறம்பட எதிர்ப்பதற்கும் ஆவணப்படுத்தப்பட்ட ஒரு தேசிய பாதுகாப்பு வியூகத்தை ஏற்படுத்த வேண்டும் என்றும் தெரிவித்துள்ளார்.
பாகிஸ்தான் இராணுவம் காஷ்மீரை ஒரு முக்கிய பிரச்சினையாக இன்னமும் உயிர்ப்புடன் வைத்துள்ளதால் எதிர்காலத்தில் எல்லை தாண்டிய பயங்கரவாத தாக்குதலுக்கு வழிவகுக்கும் என்றும் குறிப்பிட்டுள்ள சிங், உளவுத்துறை, பாதுகாப்புச் செலவு மற்றும் பன்முகத்தன்மையுடன் கூடிய போர் திறன்களில் சீர்திருத்தங்களை கொண்டுவரவேண்டும் என்றும், எதிரியின் தாக்குதலைத் தடுக்கவும் தீர்க்கமாக பதிலடி கொடுக்கவும் முப்படைகள் தயாராக இருக்க வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளார்.
















