பொங்கல் பண்டிகை நெருங்கி வரும் நிலையில், ரேஷன் கடைகளில் பொங்கல் தொகுப்போடு மண் பானையும் வழங்கத் தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மண்பாண்ட தொழிலாளர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்…. இதுபற்றிய ஒரு செய்தித்தொகுப்பை தற்போது பார்க்கலாம்.
தமிழர்களின் மரபுமிக்க, பாரம்ரியமிக்க பண்டிகை பொங்கல். தைத்திருநாளில் சூரிய பகவானை வழிபடும் வகையில், வீட்டு முற்றத்தில் மண்ணால் செய்யப்பட்ட அடுப்புக்கட்டியில், புது மண் பானையை அமர்த்தி, புத்தரிசியிட்டு, பனை ஓலையில் மணக்க, மணக்கப் பொங்கலிடுவது தமிழரின் சிறப்பு. பொங்கல் பண்டிகை நெருங்கி வரும் நிலையில், தமிழகம் முழுவதும் மண் பானை தயாரிக்கும் பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகின்றன.
தேனி மாவட்டம் ஆண்டிப்பட்டி அருகே உள்ள கொழிஞ்சிபட்டி கிராமத்தில் 50 ஆண்டுகளுக்கும் மேலாக மண்பானை தயாரிக்கும் தொழில் நடைபெற்று வருகிறது. இங்குத் தயாரிக்கப்படும் மண் பானைகள் தேனி மாவட்டத்தில் உள்ள அனைத்து பகுதிகளுக்கும் கொண்டு சென்று விற்பனை செய்யப்படுவதோடு மதுரை , திண்டுக்கல் உள்ளிட்ட பிற மாவட்டங்களுக்கும் விற்பனைக்காக அனுப்பி வைக்கப்டுகிறது.
பானைகளை செய்வதற்கு களிமண் தட்டுப்பாடு இருப்பதால் அதிகளவில் சந்தைப்படுத்த முடியவில்லை என்றும் கூறும் தொழிலாளர்கள், கண்மாய்களில் மண் எடுத்துக் கொள்ள தமிழக அரசு அனுமதி அளித்து உதவ வேண்டும் என்று வேண்டுகோள விடுக்கின்றனர்.
புது பானையில் பொங்கலிடும் காலம்போய், தற்போது பித்தளை, எவர் சில்வர், குக்கரில் எல்லாம் பொங்கலிடும் பழக்கம் வழக்கமாகி வருகிறது. இந்தச் சூழலில் நலிந்து வரும் மண் பாண்ட தொழிலுக்குப் புத்துயிர் ஊட்ட, ரேசன் கடைகளில் பொங்கல் தொகுப்புடன் மண் பானை வழங்க வேண்டும் என்கிறார்கள் மண்பாண்ட தொழிலாளர்கள்.
















