இந்தியா- பாகிஸ்தான் போரை நிறுத்தியதாக மீண்டும் மீண்டும் கூறிவரும் ட்ரம்ப், போர் நிறுத்தத்தில் முக்கிய பங்கு வகித்ததாகக் கூறி தனது சிறப்பு உதவியாளரான இந்திய வம்சாவளியைச் சேர்ந்த ரஞ்சித் ரிக்கி கில்-லுக்கு விருது வழங்கிப் பாராட்டியுள்ளார். யார் இந்த ரஞ்சித் ‘ரிக்கி’ சிங் கில்? பின்னணி என்ன? என்பது பற்றிய ஒரு செய்தி தொகுப்பு.
பஹல்காம் பயங்கரவாத தாக்குதலுக்குப் பதிலடியாக இந்தியா ஆப்ரேஷன் சிந்தூர் இராணுவ நடவடிக்கையைத் தொடங்கியது. நான்கு நாட்கள் நீடித்த இந்தப்போரில் இந்தியாவின் வான்வழி தாக்குதல்களால் பலத்த சேதமடைந்த பாகிஸ்தான் கெஞ்சிக் கேட்டுக் கொண்டதன் காரணமாக, ஆப்ரேஷன் சிந்தூரை இந்தியா தற்காலிகமாக நிறுத்தியது. ஆனால், இந்தியா- பாகிஸ்தான் போரை தான் நிறுத்தியதாக அமெரிக்க அதிபர் ட்ரம்ப், மீண்டும் மீண்டும் கூறி வருகிறார். போர் நிறுத்தத்துக்கு மூன்றாவது நாட்டின் அல்லது மூன்றாவது நபரின் தலையீடு இல்லை என்பதை இந்தியா மீண்டும் மீண்டும் உறுதியாகத் தெளிவு படுத்திவிட்டது.
இந்நிலையில் அமெரிக்க தேசிய பாதுகாப்பு கவுன்சிலில் தெற்கு மற்றும் மத்திய ஆசியாவுக்கான மூத்த இயக்குநராகவும், ட்ரம்பின் சிறப்பு உதவியாளராகவும் பணியாற்றும் ரஞ்சித் ரிக்கி கில்-லுக்கு அந்நாட்டின் வெளியுறவுத்துறை செயலாளர் மார்கோ ரூபியோ விருது வழங்கிச் சிறப்பித்துள்ளார். அதிபர் ட்ரம்ப் தனது இரண்டாவது பதவிக்காலத்தில் முக்கிய ஆலோசனைப் பதவிகளுக்காகத் தேர்ந்தெடுத்த மூன்று இந்திய-அமெரிக்கர்களில் ரிக்கி கில்லும் ஒருவர். ட்ரம்புக்கு மிகவும் நெருக்கமானவராக அறியப்படும் 37 வயதான ரஞ்சித் ரிக்கி கில், ட்ரம்பின் முதல் பதவி காலத்தில் தேசிய பாதுகாப்பு கவுன்சிலில் ரஷ்யா மற்றும் ஐரோப்பிய எரிசக்தி பாதுகாப்பு இயக்குநராகப் பணியாற்றினார்.
அப்போது, இஸ்ரேலில் உள்ள அமெரிக்க தூதரகத்தை ஜெருசலேமிற்கு இடமாற்றம் செய்யும் முக்கியமான பணியைச் செய்தார். அமெரிக்க அரசின் பல்வேறு துறைகளில் ராணுவ, இராஜதந்திர மற்றும் பொருளாதார செயல்பாடுகளை ஒருங்கிணைக்கும் சக்திவாய்ந்த அமைப்பாக தேசிய பாதுகாப்பு கவுன்சில் விளங்குகிறது. இரண்டாவது முறை அதிபர் பதவிக்கு வந்த ட்ரம்ப், இந்தியா-பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான் உள்ளிட்ட தெற்கு மற்றும் மத்திய ஆசிய விவகாரங்களைக் கவனிக்கும் முக்கிய பொறுப்பை கில்லுக்கு வழங்கினார்.
கூடுதலாக அதிபர் ட்ரம்பின் சிறப்பு ஆலோசகராகவும் கில் உள்ளார். இந்திய வம்சாவளியைச் சேர்ந்த இந்திய அமெரிக்கரான கில், நியூ ஜெர்சியின் லோடியில் பஞ்சாபி சீக்கிய குடியேறி மருத்துவர்களான ஜஸ்பீர் மற்றும் பரம் கில் தம்பதியருக்குப் பிறந்தார். பிரின்ஸ்டன் பல்கலைக்கழகத்தில் உள்ள உட்ரோ வில்சன் பொது மற்றும் சர்வதேச விவகாரப் பள்ளியில் இளங்கலைப் பட்டத்தை முடித்த கில், கலிபோர்னியா பல்கலைக்கழகம் பெர்க்லேயில் சட்டப் பட்டமும் பெற்றுள்ளார். தனது 17 வயதிலேயே கலிபோர்னியா ஆளுநர் அர்னால்ட் ஸ்வார்ஸ்னேகரால் மாநிலக் கல்வி வாரியத்தில் ஒரே மாணவர் உறுப்பினராகக் கில் நியமிக்கப்பட்டார்.
கடந்த ஆகஸ்ட் மாதம் வர்த்தக பேச்சுவார்த்தை மற்றும் இந்தியா-மத்திய கிழக்கு-ஐரோப்பா பொருளாதார வழித்தடம் (IMEC) குறித்தும் பேச்சுவார்த்தை நடத்த அமெரிக்க அரசு அதிகாரிகளுடன் இந்தியாவுக்கு வந்த கில், அதிபர் ட்ரம்ப் தான் இந்தியா- பாகிஸ்தான் போரை நிறுத்தியதாகத் திரும்ப திரும்ப இந்திய அதிகாரிகளிடம் வலியுறுத்தினார். போர் நிறுத்தம் என்பது நேரடி ராணுவப் பேச்சுவார்த்தைகளின் விளைவாக நடந்தது. மாறாக, அமெரிக்காவின் மத்தியஸ்ததால் அல்ல என்பதை இந்தியா தெளிவாக கூறியது.
போரை முடிவுக்கு கொண்டு வந்ததில் அமெரிக்காவின் ஈடுபாட்டை குறைத்து மதிப்பிடுவதால் வெள்ளை மாளிகைக்கு ஏற்பட்ட விரக்தியை கில் வெளிப்படையாக இந்திய அதிகாரிகளிடம் கூறியிருந்தார். போர் நிறுத்தத்துக்கும் ட்ரம்புக்கும் எந்த சம்பந்தமும் இல்லை என்பதை இந்தியா உறுதியாக இருப்பது ட்ரம்புக்கு எரிச்சல் ஊட்டுகிறது என்பதையும் கில் சுட்டிக் காட்டியிருந்தார். தொடர்பே இல்லாமல், இந்தியா-பாகிஸ்தான் போர்நிறுத்தத்துக்கு ‘பேச்சுவார்த்தை நடத்தியதற்காக’ கில்-லுக்கு விருது வழங்கியிருப்பது, இந்திய வல்லுநர்கள் மற்றும் வெளியுறவுத் துறை அதிகாரிகளுக்கும் வியப்பை ஏற்படுத்தியுள்ளது.
கில்லுக்கு வழங்கப்பட்ட விருது “குழப்பமாக” இருப்பதாக கூறிய முன்னாள் வெளியுறவுச் செயலாளர் கன்வல் சிபல், ட்ரம்பின் நற்பெயரை கெடுக்கும் முயற்சியாக அமெரிக்க வெளியுறவுத் துறை இந்த விருதை கில்-லுக்கு வழங்கியுள்ளதா என்றும் கேள்வி எழுப்பியுள்ளார். போர்நிறுத்தத்துக்கு எந்த மூன்றாவது நாட்டின் தலையீடும் இல்லை என்ற நாடாளுமன்றத்திலேயே பிரதமர் மோடி தெரிவித்த கருத்தை முறியடிப்பதற்கான அமெரிக்காவின் அறிவிப்பா? கில்-லுக்கான விருது என்று புவிசார் அரசியல் வர்ணனையாளரான என்.என். ஓஜா தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். தொடர்ந்து இந்தியாவுக்கு நியாயமற்ற விஷயங்களையே அமெரிக்கா செய்து வருவது, கில்-லுக்கு விருது வழங்கியதன் மூலம் மீண்டும் நிரூபணம் ஆகியுள்ளது.
















