புதுதில்லியில் இன்று (03.08.2023) நடைபெற்ற தேசிய பார்வையற்றோர் கூட்டமைப்பின் பொன்விழா நிகழ்ச்சியில் குடியரசுத்தலைவர் திரௌபதி முர்மு கலந்து கொண்டு உரையாற்றினார்.
இந்நிகழ்ச்சியில் உரையாற்றிய குடியரசுத்தலைவர்,
மாற்றுத் திறனாளிகளுக்கு கண்ணியமான வாழ்க்கையை அளிப்பது முழு சமூகத்தின் பொறுப்பாகும். அவர்களுக்கு முறையான கல்வி, வேலைவாய்ப்புகள், எளிதில் அணுகக்கூடிய பொது இடங்கள் மற்றும் பாதுகாப்பான, சிறந்த வாழ்க்கை கிடைப்பதை நாம் உறுதி செய்ய வேண்டும் என்று தெரிவித்தார்.
பார்வையற்றவர்கள் தமது திறமைகளை நம்ப வேண்டும் என்று வலியுறுத்தினார். இந்திய கலாச்சாரத்தில், அறிவைப் பெறுவதற்கும் சிறந்து விளங்குவதற்கும் இயலாமை ஒருபோதும் தடையாகக் கருதப்படவில்லை என்று கூறினார். ரிஷி அஷ்டவக்ரர் மற்றும் மகாகவி சூர்தாஸ் ஆகியோரின் எடுத்துக்காட்டுகளை மேற்கோள்க் காட்டிய அவர், “பார்வையை விட நுண்ணறிவு முக்கியம்” என்று கூறினார்.
கடந்த 50 ஆண்டுகளில் பார்வையற்றோரின் வாழ்க்கையை மேம்படுத்துவதில் முக்கியப் பங்கு வகித்ததற்காக தேசிய பார்வையற்றோர் கூட்டமைப்பை பாராட்டினார். பார்வையற்றோர் எதிர்கொள்ளும் சவால்கள் குறித்து சமூகத்தில் விழிப்புணர்வை ஏற்படுத்தி, அதன் மூலம் சமூகத்தை மேலும் உள்ளடக்கியதாக மாற்றியுள்ளது என்று குறிப்பிட்டார்.
மாற்றுத் திறனாளிகளுக்கு அதிகாரமளிப்பதற்காக அரசு பல்வேறு முன் முயற்சிகள் மூலம் தொடர்ச்சியான முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. பார்வையற்றோரின் ஒட்டுமொத்த வளர்ச்சி மற்றும் அதிகாரமளித்தல் என்ற இலக்கை அடைவதற்காக அரசு மற்றும் சமூகத்துடன் இணைந்து பார்வையற்றோருக்கான தேசியக் கூட்டமைப்பு தனது முயற்சியைத் தொடரும் என்று நம்பிக்கைத் தெரிவித்தார்.