அட்மிஷன் நேரத்தில் மாணவர்கள் பெற்றோர் என்று இரு தரப்புமே கவலைப்படக்கூடிய ஒரு முக்கியமான விஷயம் கல்விக் கடன் சார்ந்ததுதான். அது பற்றிய விரிவான தகவல்களும் வழிகாட்டலும் இதோ. இந்த வழிகாட்டல் நம் நாட்டில் உள்ள தேசிய மயமாக்கப்பட்ட வங்கிகளில் கல்வி கடன் பெறுவது எப்படி என்பது பற்றியது.
நம் நாட்டைப் பொறுத்தவரை Diploma, UG, PG என அனைத்து நிலை படிப்புகளுக்கும் கல்விக் கடன் உண்டு. அதேபோல் UGC அங்கீகரித்த எல்லா வகையான படிப்புகளுக்கும் கல்விக் கடன் உண்டு. ஒரு மாணவர் ஏதாவது ஒரு கல்வி நிறுவனத்தில் சேர்ந்த பிறகே கல்விக் கடனுக்கு விண்ணப்பிக்க முடியும் என்பது அடிப்படை. அப்படி விண்ணப்பிக்கும் போது உங்கள் நிரந்தர முகவரிக்கு அருகே உள்ள தேசிய மயமாக்கப்பட்ட வங்கியின் கிளையில்தான் நீங்கள் விண்ணப்பிக்க வேண்டும். நீங்கள் படிக்கும் கல்லூரி வேறு ஊரில் இருந்து உங்களுடைய சொந்த ஊர் வேறு என்றால் நீங்கள் உங்களுடைய சொந்த ஊரில் வீட்டுக்கு அருகே உள்ள தேசிய மயமாக்கப்பட்ட வங்கிக் கிளையில் மட்டுமே விண்ணப்பிக்க வேண்டும்.
இப்படி விண்ணப்பித்து உங்களுக்கு கிடைக்கும் கல்விக்கடன் தொகை நேரடியாக நீங்கள் படிக்கும் கல்லூரியின் பெயரில் அனுப்பப்படுமே தவிர உங்கள் கணக்குக்கு வராது. ஒருவேளை கல்விக்கடன் உங்களுக்கு வங்கியில் இருந்து கிடைப்பதற்கு முன்னரே கல்லூரியில் நீங்கள் சொந்த பணத்தை கட்டணமாக கட்டியிருந்தால் பிறகு கல்லூரிக்கு வங்கியில் இருந்து வரும் தொகையை அந்தக் கல்லூரி உங்களுக்கு திருப்பி கொடுத்து விடும்.
இந்த கல்விக் கடன் உள்நாட்டில் படிக்கும் படிப்புகளுக்கு மட்டுமல்லாது அயல்நாட்டில் சென்று படிக்கும் மாணவர்களுக்கும் வழங்கப்படுவது உண்டு. உள்நாட்டை பொருத்தவரை மருத்துவப் படிப்புகளுக்கு அதிகபட்சம் 30 லட்சம் ரூபாயும் மற்ற படிப்புகளுக்கு 10 லட்சம் ரூபாய் வரையும் கொடுக்கப்படுவதுண்டு. அயல் நாட்டைப் பொறுத்தவரை 15 லட்சம் ரூபாய் தொடங்கி ஒன்றரை கோடி ரூபாய் வரை கடன் வழங்கப்படுவதுண்டு.
இந்த கல்விக் கடன் வாங்குவதில் பலர் சந்திக்கும் சிரமம் என்னவென்றால் வங்கிகள் Surety அல்லது Collateral கேட்பதுதான். அதாவது உங்களிடம் இருக்கும் சொத்து பத்திரத்தை கொடுக்க வேண்டிய நிர்ப்பந்தம். இதில் முக்கியமாக நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டியது என்னவென்றால் தேசியமயமாக்கப்பட்ட வங்கிகளில் நான்கு லட்சம் ரூபாய் வரை நீங்கள் வாங்கும் கல்விக் கடனுக்கு எந்த சொத்து பத்திரமும் கொடுக்கத் தேவையில்லை என்று RBI தெளிவாகச் சொல்கிறது.
இந்தக் கல்விக் கடனில் என்னவெல்லாம் அடங்கும் என்று பார்த்தால், உங்களுடைய படிப்பின் கல்வி கட்டணம் மற்றும் தங்கும் விடுதி கட்டணம், Exam Fee, Library Fee, Lab Fee ஆகியவை அடங்கும். தவிர உங்கள் படிப்பு சார்ந்த புத்தகங்கள், உபகரணங்கள், கம்ப்யூட்டர் ஆகியவற்றை வாங்குவதற்கும் கடன் உண்டு. சொல்லப்போனால் உங்களுக்காக இருசக்கர வாகனம் ஒன்று வாங்கிக் கொள்ள 50,000 ரூபாய் வரை இதில் வழங்கப்படுகிறது. மற்றும் படிப்பு சார்ந்த கல்வி சுற்றுலா Project Work செலவுகளும் இதில் அடங்கும். அயல்நாட்டில் சென்று படிப்பவராக இருந்தால் சென்றுவர விமான கட்டணமும் இந்த கல்விக் கடனில் வழங்கப்படும்.
சரி, கல்வி கடனுக்கு எப்படி விண்ணப்பிப்பது ? ஏற்கனவே குறிப்பிட்டபடி உங்கள் வீட்டு அருகே உள்ள தேசிய மயமாக்கப்பட்ட வங்கிக் கிளையை அணுகும் போது அவர்கள் இதற்கென ஒரு விண்ணப்பத்தை கொடுப்பார்கள். அதை நிரப்பி அத்துடன் எவற்றையெல்லாம் நீங்கள் இணைக்க வேண்டும் என்று பார்த்தால், பத்தாம் வகுப்பு மற்றும் பிளஸ் 2 மதிப்பெண் சான்றிதழ், பட்ட மேற்படிப்பாக இருந்தால் பட்டப்படிப்பின் மதிப்பெண் சான்றிதழ், உங்களுடைய பாஸ்போர்ட் சைஸ் புகைப்படம் மற்றும் தாய், தந்தை, காப்பாளர் யாராவது ஒருவருடைய புகைப்படம் ஆகியவற்றை இணைக்க வேண்டும். கூடவே உங்கள் கல்லூரியில் நீங்கள் அங்கு சேர்ந்ததற்கான அத்தாட்சியாக ஒரு Bonafide Certificate கொடுப்பார்கள். அதில் நீங்கள் என்னவெல்லாம் கட்ட வேண்டும் என்கிற விவரத்தை Schedule of Expenses என்று குறிப்பிட்டு காட்டி இருப்பார்கள். அதையும் இணைக்க வேண்டும்.
கல்வி கடனுக்கு விண்ணப்பிக்க உங்கள் அலைச்சலை குறைப்பதற்காக மத்திய அரசு ஒரு நல்ல திட்டத்தையும் கொண்டு வந்திருக்கிறது. வித்யா லட்சுமி (www.vidyalakshmi.co.in) என்கிற இணையதளத்தில் நீங்கள் விண்ணப்பித்தால் அவர்களே பல்வேறு வங்கிகளுக்கு உங்கள் விண்ணப்பத்தை அனுப்பி அந்த வங்கிகளில் இருந்து கல்விக்கடன் தருவதற்கான தகவலையோ அல்லது மறுக்கப்பட்டால் என்ன காரணம் என்கிற தகவலையோ உங்களுக்கு நேரடியாக அனுப்புகிற வசதியை செய்து இருக்கிறார்கள். உங்களுடைய விண்ணப்பம் எந்த நிலையில் இருக்கிறது என்பதையும் நீங்கள் ட்ராக் செய்து கொள்ள முடியும். மத்திய நிதி அமைச்சகம். கல்வி அமைச்சகம் மற்றும் இந்திய வங்கிகளின் கூட்டமைப்பு ஆகியவை இணைந்து உருவாக்கி இருப்பது இந்த இணையதளம்.
சரி, இப்படி வாங்கும் கல்விக் கட்டணத்தை ஒருவர் எப்போது திருப்பி செலுத்த வேண்டும் என்று பார்த்தால் அவர் தன்னுடைய படிப்பை முடித்து ஓராண்டுக்குப் பிறகு திருப்பி செலுத்த தொடங்கலாம். ஐந்து ஆண்டுகள் முதல் ஏழு ஆண்டுகள் வரை தவணை முறையில் தன்னுடைய மொத்த கல்வி கட்டணத்தை அவர் திருப்பி செலுத்தலாம். அப்படி ஒருவர் திருப்பி செலுத்தும் இந்த தவணைத் தொகைக்கு வருமான வரி விலக்கு உண்டு என்பது நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டிய ஒரு முக்கிய தகவல்.