கடந்த சில மாதங்களாக தக்காளியின் வரத்து குறைவால் நாடு முழுவதும் தக்காளி விலை கடுமையாக உயர்ந்துள்ளது. இதனால் சில்லறை வியாபாரிகள் மற்றும் மக்கள் பெரும் சிரமத்திற்கு உள்ளாகினர். சில்லறை விற்பனையில் கிலோ ரூ -160 வரை விற்கப்பட்டு வந்த நிலையில் இந்த விலை உயர்வில் இருந்து மக்களுக்கு நிவாரணம் அளிக்கும் வகையில் தக்காளியை கொள்முதல் செய்து விற்குமாறு மத்திய அரசுக்கு சொந்தமான இந்திய தேசிய கூட்டுறவு நிறுவனம், இந்திய தேசிய வேளாண் கூட்டுறவு சந்தை கூட்டமைப்பு நிறுவனம் ஆகிய கூட்டுறவு அமைப்புகளை மத்திய அரசு கேட்டுக்கொண்டது.
அதன்படி, இந்திய தேசிய கூட்டுறவு நிறுவனம், இந்திய தேசிய வேளாண் கூட்டுறவு சந்தை கூட்டமைப்பு நிறுவனம் மூலம் இன்று முதல் ஒரு கிலோ தக்காளி ரூ -70-க்கு விற்பனை செய்யப்பட உள்ளது.
ஆந்திரா, கர்நாடகா, மராட்டியம் ஆகிய மாநிலங்களில் உள்ள தக்காளி மண்டிகளில் தக்காளியை மொத்தமாக கொள்முதல் செய்து பல்வேறு நகரங்களில் விற்பனை செய்யப்பட்டு வருகின்றன. இதுவரை 391 டன் தக்காளி கொள்முதல் செய்யப்பட்டுள்ளது.
மானிய விலை சில்லரை விற்பனைக்கு கடந்த 14-ந் தேதி தொடங்கியது. முதலில் கிலோ ரூ -90ஆக விற்கப்பட்டது. அதைத்தொடர்ந்து கடந்த 16-ந் தேதி கிலோ ரூ -80 ஆக குறைக்கப்பட்டது.
இந்நிலையில், தக்காளி விலை குறைந்து வருவதை கருத்தில் கொண்டு, மானிய விலை தக்காளியை கிலோ ரூ -70 ஆக குறைத்து விற்கும்படி ‘இந்திய தேசிய கூட்டுறவு நிறுவனத்திற்கும் இந்திய தேசிய வேளாண் கூட்டுறவு சந்தை கூட்டமைப்பு நிறுவனத்திற்கும் ] மத்திய நுகர்வோர் விவகாரத்துறை உத்தரவிட்டுள்ளது.
இன்று ( வியாழக்கிழமை) முதல், கிலோ ரூ- 70 விலை குறைப்பு அமலுக்கு வருகிறது.