நாடாளுமன்ற மழைக்கால கூட்டத் தொடர் நேற்று தொடங்கியது. முதல் நாளே மணிப்பூர் மாநிலத்தில் இரண்டு பழங்குடி இன பெண்களுக்கு எதிரான குற்றச் சம்பவம் தொடர்பாக எதிர்க்கட்சிகள் விவாதிக்க வேண்டுமென அமளியில் ஈடுபட்டன.
இரண்டாவது நாளான இன்று, மக்களவை கூடியதும் மணிப்பூர் விவாகாரத்தை விவாதிக்க வலியுறுத்தி எதிர்க்கட்சிகள் கடும் அமளியில் ஈடுபட்டன. இதனையடுத்து மக்களவை இன்று நாள் முழுவதும் ஒத்திவைக்கப்பட்டது.
எதிர்க்கட்சியினர் அமளிக்கிடையே, மத்திய பாதுகாப்பு துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் பேசும்போது,
மணிப்பூர் விவகாரம் மிகவும் முக்கியமானது, இந்த சூழ்நிலையை புரிந்து கொள்ள முடிகிறது, இந்த சம்பவத்திற்குப் பிரதமர் நரேந்திர மோடி கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். இந்த விவகாரத்தில் கடும் நடவடிக்கை எடுக்கப்படும். இந்த விவகாரத்தைக் குறித்து நாங்கள் விவாதிக்கவே விரும்புகிறோம், ஆனால் மணிப்பூர் விவகாரம் குறித்து விவாதம் நடந்து விடக்கூடாது என சில கட்சிகள் செயல்படுகின்றன. மணிப்பூர் குறித்து அந்தக் கட்சிகள் கவலைப்படவில்லை என தெரிவித்தார்.
மாநிலங்களவையிலும் எதிர்க்கட்சியினர் கடும் அமளியில் ஈடுபட்டதால், பிற்பகல் 2:30 மணிவரை மாநிலங்களவை ஒத்திவைக்கப்பட்டுள்ளது.