நாடாளுமன்றத்தில் மழைக்கால கூட்டத்தொடர் எதிர்க்கட்சிகளின் அமளியால் முடங்கியது. இதனால் அடுத்த கட்ட நடவடிக்கை குறித்து, ஆலோசனை நடத்த பாஜக நாடாளுமன்றக் குழு நாளை அவசரமாக கூடுகிறது.
நாடாளுமன்றத்தில் மழைக்கால கூட்டத் தொடர், 20ம் தேதி தொடங்கியது. கூட்டம் தொடங்கிய நாள் முதல் இன்று வரை மணிப்பூர் சம்பவம் தொடர்பாக பிரதமர் நரேந்திர மோடி பதில் அளிக்க வேண்டும், முழு விவாதம் நடத்த வேண்டும் என எதிர்க்கட்சிகள் அமளியில் ஈடுபட்டன. இதனால் மாநிலங்களவை, மக்களவை கூட்டத் தொடர் முழுவதும் முடங்கியது.
இன்று நடைபெற்ற கூட்டத்தில் பேசிய மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா,
மணிப்பூர் விவகாரம் குறித்து மக்களவையில் விவாதம் நடத்த மத்திய அரசு தயாராக உள்ளது, ஆனால் எதிர்கட்சிகள் தயாராகாமல், அமளியில் ஈடுபட்டு வருவது, ஆச்சரியமாக உள்ளது. மணிப்பூர் விவகாரம் குறித்த உண்மையை நாட்டு மக்களுக்கு கொண்டு வருவது மிக முக்கியம் என்றும் இதற்கு எதிர்க்கட்சித் தலைவர்கள் விவாதத்திற்கு வரவேண்டுமென கேட்டுக்கொண்டார்.
இந்நிலையில், அடுத்த கட்ட நடவடிக்கை குறித்து, ஆலோசனை நடத்த நாளை பா.ஜ.க நாடாளுமன்ற குழு அவசரமாக கூடுகிறது. அப்போது, மழைக்கால கூட்டத் தொடர் தொடர்ந்து நடத்துவது குறித்து, முக்கிய ஆலோசனை நடைபெற உள்ளது.