தமிழ்நாடு அரசின் பால்வளத்துறையின் கீழ் செயல்பட்டு வரும் ஆவின் பால் நிறுவனம் தினசரி 4.20 லட்சம் பால் உற்பத்தியாளர்கள் மூலம் நாளொன்றுக்கு சராசரியாக 36 லட்சம் லிட்டர் பால் கொள்முதல் செய்யப்பட்டு வருகிறது. அதில் 30 லட்சம் லிட்டர் பால் நாள்தோறும் குடிம்மக்களுக்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
இந்நிறுவனத்தில், பால் தவிர மோர், தயிர், வெண்ணெய், நெய், லஸ்ஸி, பனீர், யோகர்ட், பாதாம் பவுடர், குலாப் ஜாமுன், குலாப் ஜாமுன் மிக்ஸ், பால் பவுடர், ஐஸ் கிரீம்கள், சாக்லேட்கள், பால்கோவா, பால்பேடா, மைசூர்பாகு, ரசகுல்லா, மில்க் ஷேக் போன்ற பலவகையான பால் சார்ந்த பொருட்களும் விற்பனை செய்யப்பட்டு வருகின்றன.
இந்நிலையில், ஆவின் பால் பொருட்களின் விலை உயர்த்தப்பட்டுள்ளது. அதன்படி, ஆவின் விற்பனையகங்களில், இந்த பொருட்கள் மீதான விலை ரூ.20 முதல் ரூ.100 வரை உயர்த்தப்பட்டுள்ளது. ஆவின் பன்னீர் ஒரு கிலோ விலை ரூ.450 என இதுவரை விற்கப்பட்டு வந்த நிலையில் 100 ரூபாய் உயர்ந்து ரூ.550 ஆக விற்கப்படும் எனவும் பன்னீர் அரை கிலோ விலை ரூ.250இல் இருந்து 50 ரூபாய் அதிகரித்து ரூ.300 ஆக உயர்த்தப்பட்டுள்ளது. பன்னீர் 200 கிராம் விலை ரூ.100இல் இருந்து ரூ.120ஆக உயர்த்தப்பட்டுள்ளது. அதேபோல், பாதாம் மிக்ஸ் 200 கிராம் விலை 100 ரூபாயில் இருந்து ரூ.120ஆக உயர்த்தப்பட்டுள்ளது.
இந்த விலை உயர்வு இன்று முதல் அமலுக்கு வந்துள்ளது. கடந்த சில மாதங்களுக்கு முன்னர் ஆவின் பால் விலை உயர்த்தப்பட்ட நிலையில் தற்போது பால் பொருட்களின் விலையும் உயர்த்தப்பட்டுள்ளது. ஏற்கனவே பால் விலை உயர்த்தப்பட்ட நிலையில், பால் பொருட்களின் விலை உயர்வால் பொதுமக்கள் வேதனை அடைந்துள்ளனர்.