வணிக நடைமுறைகளை எளிதாக்கும் வகையில் மாநில கூட்டுறவு சங்க திருத்த மசோதா நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடரில் தாக்கல் செய்யப்படும் என அமித்ஷா கூறியிருந்தார்.
இன்று நடைபெற்ற மக்களவையில் மணிப்பூர் விவகாரம் தொடர்பாக எதிர்க்கட்சிகள் கடும் அமளியில் ஈடுபட்டனர். எதிர்க்கட்சிகளின் அமளிக்கு மத்தியில் கூட்டுறவு சங்க திருத்த மசோதாவை மத்திய உள்துறை, கூட்டுறவுத்துறை அமைச்சரான அமித்ஷா தாக்கல் செய்தார்.
மணிப்பூர் விவகாரத்தில் மத்திய அரசு விவாதம் நடத்த தயக்கம் காட்டுகிறது. அங்கு என்ன நடக்கிறது என்பதை தெரிவிக்காமல் மறைக்கிறது. ஆட்சிக்கு கெட்ட பெயர் ஏற்படும் என அஞ்சுகிறது என எதிர்கட்சியினர் குற்றம்சாட்டினர்.
இதற்கு பதில் அளித்து மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா பேசியதாவது,
மணிப்பூர் விவகாரத்தில் விவாதம் நடத்த தயார் என எதிர்கட்சி எம்.பி.,க்களுக்கு நான் கடிதம் எழுதியுள்ளேன். அதில் இந்த விவகாரம் குறித்து இரு அவைகளிலும் விவாதிக்க இந்த அரசு தயாராக உள்ளது. இந்த விவகாரத்தில் எதையும் மறைக்கவும் இல்லை. அச்சப்படவும் இல்லை. இணக்கமான சூழ்நிலையை கொண்டு வர வேண்டும் என்றால் எதிர்கட்சியினர் ஒத்துழைக்க வேண்டும் என்றார்.