2024 மக்களவைத் தேர்தலுக்கு வியூகங்கள் வகுப்பது தொடர்பாக விவாதிப்பதற்காக பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலும், உள்துறை அமைச்சர் அமித்ஷா, பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் ஆகியோர் முன்னிலையிலும் தேசிய ஜனநாயக கூட்டணியைச் சேர்ந்த முக்கிய எம்.பி.க்களின் கூட்டம் நேற்று நடந்தது. இக்கூட்டத்தில், ஜார்க்கண்ட், ஒடிஸா, மேற்குவங்கம் ஆகிய மாநிலங்களைச் சேர்ந்த எம்.பி.க்கள் கலந்து கொண்டனர். சுமார் ஒன்றரை மணி நேரம் நடந்த இக்கூட்டத்தில், தே.ஜ.கூ. எம்.பி.க்களின் கருத்துக்கள் கேட்கப்பட்டது.
தொடர்ந்து, ஜார்க்கண்ட், ஒடிஸா, மேற்குவங்கம் குறித்த காணொளி திரையிடப்பட்டது. அந்த காணொளியில் கடந்த 9 ஆண்டுகளில் மேற்குவங்க மாநிலத்திற்குத் தேசிய ஜனநாயக கூட்டணி செய்திருக்கும் வளர்ச்சித் திட்டங்கள் மற்றும் அம்மாநிலத்தில் நடந்த வன்முறைகள் குறித்த காட்சிகள் இடம் பெற்றிருந்தன.
இக்கூட்டம் குறித்து பா.ஜ.க. தேசிய பொதுச் செயலாளர் தருண் சௌக் கூறுகையில், “தேசிய ஜனநாயகக் கூட்டணி கடந்த 25 ஆண்டுகளாக இந்த பாரத தேசத்துக்கு சேவை செய்திருக்கிறது. தே.ஜ.கூ. 25 ஆண்டுகளை நிறைவு செய்திருப்பதால், இக்கூட்டதிற்கு பிரதமர் மோடி தலைமை தாங்கினார்” என்று கூறினார்.
பா.ஜ.க. எம்.பி. ஹர்நாத் சிங் யாதவி கூறுகையில், “கூட்டத்தில் 2024 மக்களவை தேர்தலுக்கான முன்னேற்பாடுகள் குறித்து விவாதிக்கப்பட்டது. மத்திய அரசின் சாதனைகளை மக்களிடம் விளக்கிச் சொல்வோம்” என்றார்.
மேற்குவங்க மாநில பா.ஜ.க. தலைவர் சுகந்தா மஜும்தார் கூறுகையில், “கூட்டத்தில் பேசிய பிரதமர் மோடி, ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசில் 2ஜி, 3ஜி போன்ற ஊழல்கள் அரங்கேறின. ஆகவே, அக்கூட்டணிக்கு தற்போது இந்தியா என்று பெயர் வைத்திருக்கிறார்கள்” என்று கூறியதாகத் தெரிவித்தார்.
பா.ஜ.க. எம்.பி. அனில் அகர்வால் கூறுகையில், “மக்களை சந்தித்து மத்திய அரசின் சாதனை விளக்கி கூற வேண்டும் என்றும், நாம் மக்களுடன் மக்களாக கலந்து, அவர்களுக்கு எவ்வளவு சேவை செய்கிறோமோ, அந்தளவுக்கு நமது வெற்றி பிரகாசமாக இருக்கும் என்று தெரிவித்தார்” என்றார்.
இன்று உத்தரப் பிரதேசம், தெலங்கானா, ஆந்திரா, கர்நாடகா, கேரளா, தமிழ்நாடு, புதுச்சேரி, அந்தமான் நிக்கோபார், லட்சத்தீவு ஆகிய மாநிலங்களைச் சேர்ந்த தே.ஜ.கூ. எம்.பி.க்களுக்கான கூட்டம் நடைபெறுகிறது. பீகார், டெல்லி, இமாச்சல், பஞ்சாப், சண்டிகர், ஹரியானா, உத்தரகண்ட், ஜம்மு காஷ்மீர், லடாக் ஆகிய மாநிலங்களின் எம்.பி.க்களுக்கான கூட்டம் நாளை நடைபெறவுள்ளது.
ஆகஸ்ட் 8-ம் தேதி ராஜஸ்தான், மகாராஷ்டிரா, கோவா ஆகிய மாநிலங்களுக்கும், 9-ம் தேதி மத்தியப் பிரதேசம், சத்தீஸ்கர், குஜராத், தாத்ரா மற்றும் நாகர் ஹவேலி, டாமன், டையூ ஆகிய மாநிலங்களின் எம்.பி.க்களுக்கான கூட்டம் நடைபெறவுள்ளது.