ராஜஸ்தானில் 336 அரசு அதிகாரிகள் அதிரடியாக மாற்றம் செய்யப்பட்டிருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.
ராஜஸ்தானில் முதல்வர் அசோக் கெலாட் தலைமையிலான காங்கிரஸ் கட்சி ஆட்சி நடைபெற்று வருகிறது. எனினும், அக்கட்சியின் மாநில தலைவர் சச்சின் பைலட்டுக்கும், அசோக் கெலாட்டுக்கும் இடையே மோதல் போக்கு நிலவி வருகிறது. அசோக் கெலாட்டை முதல்வர் பதவியில் இருந்து நீக்க வேண்டும் என்ற சச்சின் பைலட் வலியுறுத்தி வருகிறார். மேலும், அரசு மீது பல்வேறு ஊழல் மற்றும் முறைகேடு குற்றச்சாட்டுக்களை கூறி வருகிறார். இதனால், மாநிலத்தில் பதட்டம் மற்றும் பரபரப்பான சூழல் நிலவி வருகிறது.
ராஜஸ்தான் மாநிலத்தில் விரைவில் சட்டமன்றத் தேர்தல் நடைபெறவிருக்கும் நிலையில், அரசு நிர்வாகத்தின் மீதான நம்பகத்தன்மையையும், வெளிப்படைத்தன்மையையும் உறுதிப்படுத்தும் வகையில், அரசு நிர்வாகத்தில் அதிரடி மாற்றத்தை செய்திருக்கிறார் முதல்வர் அசோக் கெலாட்.
ஒரே நாளில் அரசு அதிகாரிகள் 336 பேரை அதிரடியாக மாற்றம் செய்திருக்கிறார். தேர்தல் நெருங்கும் நேரத்தில் இப்படியாரு அதிரடி மாற்றத்தை செய்திருப்பது அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.
ஏற்கெனவே, கடந்த ஜூன் மாதம் 2-ம் தேதி 7 ஐ.ஏ.எஸ். அதிகாரிகளையும், 30 ஐ.பி.எஸ். அதிகாரிகளையும் முதல்வர் அசோக் கெலாட் அதிரடியாக மாற்றம் செய்திருந்தது குறிப்பிடத்தக்கது.