இலங்கைக்கு அத்தியாவசியமான உதவிகள் தடையின்றி கிடைக்கவும், அனைத்து சேவைகளையும் டிஜிட்டல் மயமாக்கவும் ரூ.450 மில்லியன் இந்தியா வழங்கியது.
இலங்கை மக்களுக்கு அத்தியாவசியமான உதவிகள் தடையின்றி கிடைக்கவும், அனைத்து சேவைகளையும் டிஜிட்டல் மயமாக்கவும், இந்தியாவின் உதவியை இலங்கை கேட்டிருந்தது. அதற்கு இந்தியா ஒப்புக் கொள்ள, இலங்கைக்கும் இந்தியாவுக்கும் இடையில் மார்ச், 2022-ல் ஒரு புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்திடப்பட்டது.
அதில் நாடு முழுவதும் சேவைகளை டிஜிட்டல் மயமாக்கத் தேவைப்படும் பொருளாதார மற்றும் தொழில்நுட்ப உதவியை இலங்கைக்கு இந்தியா வழங்கும் எனவும், அதற்கான மென்பொருள் ஆலோசனையையும் இந்திய அரசு வழங்கி உதவி செய்யும் என்று கூறப்பட்டது.
இந்த சேவைகள் மூலம், அரசாங்கத்தின் வறுமை குறைப்பு திட்டங்கள், மக்கள் நலத்திட்டங்கள் மற்றும் இதர சேவைகளை வங்கிகள் மூலம் டிஜிட்டலாக மக்களுக்கு பயனுள்ள முறையில் கொண்டு செல்ல முடியும்.
அதன்படி சர்வதேச சிவில் விமானத்துறை அமைப்பின் தர நிலைகளின் படி அடையாள அட்டைகளை வழங்குவதற்காக ஒரு மையப்படுத்தப்பட்ட அமைப்பில் இலங்கை குடிமக்களின் முகம், கருவிழி மற்றும் கைரேகை தரவுகள் உள்ளிட்ட சுயவிவரம் உள்ளிட்ட பயோமெட்ரிக் தகவல்கள் சேகரிக்கப்பட்டு வருகின்றனர்.
இந்நிலையில் இலங்கையின் தனித்துவமான டிஜிட்டல் அடையாள திட்டத்திற்கு (Sri Lanka Unique Digital Identity Project) நிதியாக இந்தியா ரூ.450 மில்லியனை இலங்கைக்கு வழங்கியுள்ளது. இத்திட்டத்திற்காக “தேவைப்படும் மொத்த நிதியில், இது 15 சதவீதமாகும்” என இலங்கை அதிபர் ரணில் விக்ரமசிங்கே அலுவலகம் தெரிவித்துள்ளது.
ஏற்கனவே சரிந்திருக்கும் இலங்கையின் பொருளாதாரத்தை மீட்க இந்திய அரசாங்கம் தருகின்ற உறுதியான ஆதரவிற்காக இலங்கை அதிபர் தனது மனமார்ந்த நன்றியை தெரிவித்தார்.