எதிர்க்கட்சிகளின் கூட்டணிக்கு “இந்தியா” என்று பெயர் சூட்டப்பட்டிருக்கும் நிலையில், இந்தியா என்று பெயர் வைப்பதால் மட்டும் எதுவும் நடக்கப்போவதில்லை என்று மத்திய அமைச்சர் கிரண் ரிஜூஜூ கடுமையாக விமர்சித்திருக்கிறார்.
நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் கடந்த மாதம் 20-ம் தேதி தொடங்கி நடந்து வருகிறது. மணிப்பூர் விவகாரம் தொடர்பாக கடும் அமளியில் ஈடுபட்டிருக்கும் எதிர்க்கட்சிகள், பா.ஜ.க. தலைமையிலான மத்திய அரசின் மீது நம்பிக்கை இல்லாத் தீர்மானம் கொண்டு வந்துள்ளனர். இத்தீர்மானத்தின் மீதான விவாதம் மக்களவையில் நேற்று தொடங்கியது.
அப்போது பேசிய மத்திய அமைச்சர் கிரண் ரிஜூஜி, “எதிர்க்கட்சிகள் இந்தியாவுக்கு எதிராக செயல்பட்டு வருகின்றன. ஆனால், கூட்டணிக்கு இந்தியா என்று பெயர் வைத்திருக்கிறார்கள். இந்தியாவுக்கு எதிராக செயல்பட்டுக் கொண்டு இந்தியா என்று பெயர் வைப்பதால் எதுவும் நடக்கப்போவதில்லை. அரசியல் ஆதாயத்துக்காக மணிப்பூர் விவகாரத்தை எதிர்க்கட்சிகள் கையிலெடுத்து உள்ளன. மத்திய அமைச்சர்களும், மாநில அமைச்சர்களும் 15 நாட்களுக்கு ஒருமுறை வடகிழக்கு மாநிலங்களுக்கு செல்ல வேண்டும் என்று பிரதமர் மோடி அறிவுறுத்தி இருக்கிறார்” என்று கூறியிருக்கிறார்.