வங்கிக் கணக்கில் 1.34 கோடி ரூபாய் வந்தது எப்படி? மனைவி மேகலா வங்கிக் கணக்கில் 29.55 லட்சம் வந்தது எப்படி? 60 சொத்துக்கள் வந்தது எப்படி? என செந்தில் பாலாஜியிடம் அமலாக்கத்துறை அதிகாரிகள் தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள்.
சட்ட விரோத பணப் பரிமாற்ற வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள அமைச்சர் செந்தில் பாலாஜியை, நீண்ட சட்டப் போராட்டத்துக்குப் பிறகு 5 நாட்கள் காவலில் எடுத்திருக்கிறது அமலாக்கத்துறை. சென்னை புழல் சிறையில் அடைக்கப்பட்டிருந்த அவரை, கடந்த 7-ம் தேதி இரவு சென்னை நுங்கம்பாக்கம் சாஸ்திரிபவனில் உள்ள அமலாக்கத்துறை அலுவலகத்துக்கு பலத்த பாதுகாப்புடன் அழைத்து வந்தனர். அன்றிரவு 9 மணியளவில் செந்தில் பாலாஜியிடம் விசாரணையைத் தொடங்கிய அமலாக்கத்துறை அதிகாரிகள் விடிய விடிய விசாரணை நடத்தினர்.
தொடர்ந்து நேற்றும் விசாரணை நடந்தது. அப்போது செந்தில் பாலாஜியிடம் காலையில் 3 மணி நேரம், மதியம் 3 மணி நேரம், இரவு 3 மணி நேரம் என 9 மணி நேரம் அமலாக்கத்துறை அதிகாரிகள் விசாரணை நடத்தி இருக்கிறார்கள். இந்த விசாரணையின் போது செந்தில் பாலாஜிக்கு அவ்வப்போது மருத்துவர்கள் இரத்த அழுத்த பரிசோதனை செய்தனர்.
விசாரணையின் போது, அமலாக்கத்துறை அதிகாரிகள் கேட்ட பெரும்பாலான கேள்விகளுக்கு ‘தனக்குத் தெரியாது’ என்றே செந்தில் பாலாஜி பதிலளித்திருக்கிறார். அதேபோல, அ.தி.மு.க. ஆட்சிக் காலத்தில் அமைச்சராக இருந்த போது, அவரது வங்கிக் கணக்குக்குப் பரிமாற்றம் செய்யப்பட்ட 1.34 கோடி ரூபாய் எப்படி வந்தது? என்றும், அவரது மனைவி மேகலா வங்கிக் கணக்கில் 29.55 லட்சம் ரூபாய் எப்படி வந்தது? எனவும் அமலாக்கத்துறை அதிகாரிகள் கேள்வி எழுப்பினர். அதற்குத் தங்களது பரம்பரை சொத்தை விற்றுக் கிடைத்தப் பணத்தில், தனது பங்கை அவரது சகோதரர் செலுத்தியதாகத் தெரிவித்திருக்கிறார்.
இதைத் தொடர்ந்து, செந்தில் பாலாஜியின் தீவிர விசுவாசியான திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் வீரா.சாமிநாதன் வீட்டில் கைப்பற்றப்பட்ட 60 சொத்து ஆவணங்கள் குறித்து அமலாக்கத்துறை அதிகாரிகள் கேள்வி எழுப்பி இருக்கிறார்கள். இதற்கு அவர் எவ்வித பதிலையும் கூறவில்லை என்று கூறப்படுகிறது. அவர் அலுவலகத்திலேயே தங்குவதற்கு அறை ஏற்பாடு செய்யப்பட்டிருக்கிறது.
இதேபோல, வரும் 12-ம் தேதி வரை செந்தில் பாலாஜியிடம் அமலாக்கத்துறை அதிகாரிகள் விசாரணை நடத்துவார்கள் என்று கூறப்படுகிறது. இது ஒருபுறம் இருக்க, செந்தில் பாலாஜியின் சகோதரர் அசோக்குமாருக்கு 5 முறை சம்மன் அனுப்பியும் அமலாக்கத்துறை அலுவலகத்தில் ஆஜராகவில்லை என்பதால், அவரை கைது செய்ய அமலாக்கத்துறை தீவிர முயற்சி மேற்கொண்டிருக்கிறது.