பாகிஸ்தானில் இரயில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 30-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். 120க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
பாகிஸ்தானின் கராச்சி நகரில் இருந்து கைபர் பக்துன்க்வா மாகாணத்திலுள்ள ஹவேலியன் நகருக்கு ஹசாரா எக்ஸ்பிரஸ் இரயில் இயக்கப்பட்டு வருகிறது. இந்த இரயில் வழக்கம்போல நேற்று 500 பயணிகளுடன் புறப்பட்டுச் சென்றது. சிந்த் மாகாணம் சஹாரா இரயில் நிலையத்தில் பயணிகளை ஏற்றி, இறக்கிவிட்டு புறப்பட்ட இரயில், ஷாஹ்ஷாத்பூர் மற்றும் நவாப்ஷா இடையே உள்ள சரிஹாரி ரயில் நிலையம் அருகே சென்று கொண்டிருந்த போது, திடீரென தண்டவாளத்தில் இருந்து தடம் புரண்டு தாறுமாறாக தரையில் ஓடியது.
பின்னர், பயங்கர சத்தத்துடன் அங்கிருந்த இரும்பு பாலத்தின் மீது மோதியது. இதில், இரயிலின் 8 பெட்டிகள் ஒன்றோடொன்று மோதி சிதறி கவிழ்ந்தன. இதில் இரயிலில் இருந்த பயணிகள் அங்குமிங்குமாக தூக்கி வீசப்பட்டனர். எங்கு பார்த்தாலும் பயணிகளின் கூக்குரலாக இருந்தது. சத்தம் கேட்டு அங்கம்பக்கத்தினர் ஓடிவந்து பயணிகளை மீட்கும் முயற்சியில் ஈடுபட்டனர். தகவலறிந்து போலீஸாரும், தீயணைப்பு மற்றும் மீட்புப் படையினரும் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து மீட்புப் பணியில் ஈடுபட்டனர்.
எனினும், இந்த விபத்தில் சம்பவ இடத்திலேயே 22 பயணிகள் உயிரிழந்து விட்டனர். மேலும், படுகாயமடைந்த 120க்கும் மேற்பட்ட பயணிகள் மீட்கப்பட்டு அருகிலுள்ள மருத்துவமனைகளில் சேர்க்கப்பட்டனர். இவர்களில் 8 பேர் மருத்துவமனையில் உயிரிழந்து விட்டனர். இன்னும் 200-க்கும் மேற்பட்டோர் இரயிலின் இடிபாடுகளிடையே சிக்கிக் கொண்டிருக்கின்றனர். ஆகவே, பலி எண்ணிக்கை மேலும் அதிகரிக்கலாம் என்று அஞ்சப்படுகிறது.
இதனிடையே, இரயில் விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப் இரங்கல் தெரிவித்திருக்கிறார். பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான் கான் கடந்த 5-ம் தேதி ஊழல் வழக்கில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டிருக்கும் நிலையில், 6-ம் தேதி காலையில் இச்சம்பவம் நிகழ்ந்திருப்பது பல்வேறு சந்தேகங்களை கிளப்பி இருக்கிறது.
இவ்விபத்து குறித்து பாகிஸ்தான் இரயில்வே அமைச்சர் காஜா ரபீக் கூறுகையில், “பாகிஸ்தானில் நேரிட்ட மிகப்பெரிய இரயில் விபத்து இது. இவ்விபத்து தொழில்நுட்பக் கோளாறு காரணமாக நிகழ்ந்ததா அல்லது தீவிரவாதிகளின் சதி வேலை காரணமா என்பது குறித்து விசாரணை நடந்து வருகிறது” என்றார்.
போலீஸ் தரப்பில் கூறுகையில், “இந்த இரயில் விபத்தை பார்க்கும்போது தீவிரவாதிகளின் சதி வேலை காரணமாக இருக்கலாம் என்று சந்தேகிக்கிறோம்” என்கின்றனர்.
அதேசமயம், ராணுவத் தரப்பிலோ, “இந்த இரயில் கைபர் பக்துன்க்வா மாகாணத்திற்கு செல்கிறது. அங்கு தெகிரீக் இ தாலிபான்களின் ஆதிக்கம் அதிகம் இருக்கிறது. ஆகவே, இரயில் விபத்தில் தாலிபான் தீவிரவாதிகள் சதி இருக்கலாம்” என்கிறார்கள். ஆக, இரயில் விபத்துக்கு காரணம் தீவிரவாதிகள்தான் என்பது கிட்டத்தட்ட உறுதி செய்யப்பட்டிருக்கிறது.