சட்ட விரோத பணப் பரிமாற்ற வழக்கில் ஜார்கண்ட் மாநில முதல்வர் ஹேமந்த் சோரனுக்கு அமலாக்கத்துறை சம்மன் அனுப்பி இருக்கிறது.
ஜார்க்கண்ட் மாநிலத்தில் முதல்வர் ஹேமந்த் சோரன் தலைமையில் ஜார்கண்ட் முக்தி மோர்ச்சா கட்சி மற்றும் காங்கிரஸ் கூட்டணி ஆட்சி நடந்து வருகிறது. ஜார்க்கண்ட் மாநில முதல்வராக இருக்கும் ஹேமந்த் சோரன் சுரங்கத்துறை அமைச்சராகவும் இருந்து வருகிறார். இந்த சூழலில், ஹேமந்த் சோரனின் உதவியாளரான பங்கஜ் மிஸ்ரா, அம்மாநிலத்தின் சாஹேப் கஞ்ச் மாவட்டத்தில் சுரங்கம் தோண்டினார். தனது உதவியாளருக்கு சுரங்க ஒப்பந்தம் வழங்கியது தேர்தல் நடத்தை விதிமுறைகளை மீறிய செயலாகும் என்று குற்றம் சாட்டப்பட்டது.
மேலும், மேற்கண்ட சுரங்க முறைகேட்டில் சட்ட விரோத பணப் பரிமாற்றத்தில் ஈடுபட்டதாகவும் புகார்கள் எழுந்தன. இதையடுத்து, கடந்தாண்டு நவம்பர் மாதம் ஜார்கண்ட் மாநிலம் ராஞ்சியிலுள்ள அமலாக்கத்துறை அலுவலகத்தில் ஆஜராகுமாறு முதல்வர் ஹேமந்த் சோரனுக்கு அமலாக்கத்துறை சம்மன் அனுப்பியது. ஆனால், அமலாக்கத்துறை விசாரணைக்கு ஆஜராகாமல், சத்தீஸ்கர் மாநிலத்தில் நடந்த நடன நிகழ்ச்சிக்குச் சென்று விட்டார் ஹேமந்த் சோரன்.
அதோடு, அமலாக்கத்துறை சம்மன் அனுப்பியவுடன் ஆஜராவதற்கு நாங்கள் என்ன திருடர்களா அல்லது சமூக விரோதிகளா என்றும் கேள்வி எழுப்பி இருந்தார். இந்த சூழலில், வரும் 14-ம் தேதி ராஞ்சியிலுள்ள அமலாக்கத்துறை அலுவலகத்தில் நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்குமாறு முதல்வர் ஹேமந்த் சோரனுக்கு மீண்டும் நோட்டீஸ் அனுப்பப்பட்டிருக்கிறது.