டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் நேற்று காலையில் ஏற்பட்ட திடீர் தீவிபத்தில் அவசரச் சிகிச்சைப் பிரிவில் இருந்த பொருட்கள் எரிந்து நாசமாயின.
டெல்லியில் எய்ம்ஸ் மருத்துவமனை செயல்பட்டு வருகிறது. இந்த மருத்துவமனையின் அவசரச் சிகிச்சைப் பிரிவு அமைந்துள்ள அறையில் நேற்று காலையில் திடீரென தீ விபத்து ஏற்பட்டது. இதையடுத்து அத்தளத்தில் இருந்த நோயாளிகள் அனைவரும் அவசர அவசரமாக வேறு இடத்திற்கு மாற்றப்பட்டனர்.
தீ மளமளவென கொழுந்து விட்டு எரிந்ததால் மருத்துவமனை கட்டடத்தில் இருந்து கரும்புகை வெளியேறியது. தகவலறிந்த தீயணைப்பு மற்றும் மீட்புப் படையினர் 8 வாகனங்களில் விரைந்து வந்து தீயைப் போராடி கட்டுக்குள் கொண்டு வந்தனர். இந்த தீ விபத்தால் எய்ம்ஸ் மருத்துவமனை வளாகத்தில் பரபரப்பு ஏற்பட்டது.
தீ விபத்து குறித்த முதற்கட்ட விசாரணையில், மின்கசிவு காரணமாக தீ விபத்து ஏற்பட்டிருப்பது தெரியவந்திருக்கிறது. எனினும், இதுகுறித்து முழுமையான விசாரணை நடத்த பிறகே, தீ விபத்துக்கான உண்மையான காரணம் தெரியவரும் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.