வர்த்தகர்கள், தொழில் முனைவோர் மீது விசாரணை இன்றி முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யக் கூடாது என்று காவல்துறையினருக்கு உத்தரப் பிரதேச மாநில முதல்வர் யோகி ஆதித்யநாத் உத்தரவிட்டிருக்கிறார்.
இதுகுறித்து முதல்வர் யோகி ஆதித்யநாத் வெளியிட்டிருக்கும் அறிக்கையில், “வர்த்தகர்கள் மற்றும் தொழில் முனைவோர் மீது பதிவு செய்யப்படும் அடிப்படை ஆதாரமற்ற முதல் தகவல் அறிக்கைகளால், தேவையில்லாத குழப்பங்களும், அழுத்தங்களும் ஏற்படுகிறது. ஆகவே, விசாரணை இன்றி வணிகர்கள் மற்றும் தொழில் முனைவோர் மீது முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யக் கூடாது. வணிகர்கள் மீதான அடிப்படை ஆதாரமற்ற வழக்குகளை தவிர்க்கும் நோக்கிலும், வழக்கின் எண்ணிக்கையை குறைக்கும் வகையிலும் மேற்கண்ட உத்தரவு பிறப்பிக்கப்படுகிறது” என்று குறிப்பிடப்பட்டிருக்கிறது.
ஒரு வழக்கில் உச்ச நீதிமன்றம் வழங்கிய வழிகாட்டுதலின் பேரில், இந்த முடிவு எடுக்கப்பட்டிருப்பதாகத் தெரிகிறது. இந்த புதிய உத்தரவின் மூலம் உத்தரப் பிரதேசத்தில் இனி வணிகர்கள், தொழில் முனைவோருக்கு எதிராக யாரும் நேரடியாக முதல் தகவல் அறிக்கை பதிவு செய்ய முடியாது. மேலும், மாநிலத்தின் வளர்ச்சித் திட்டங்களை விரைவுபடுத்தவும், எளிதாக வணிகம் செய்வதற்கு எந்தத் தடையும் இல்லை என்பதையும் உறுதி செய்வதில் மாநில அரசு உறுதியாக இருக்கிறது என்று தெரிவிக்கப்பட்டிருக்கிறது.
முதல்வர் யோகி தலைமையிலான பா.ஜ.க. அரசு உத்தரப் பிரதேசத்தில் தொழில், வணிகத்தை மேம்படுத்த பல்வேறு சீர்திருத்த நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. அந்த வகையில், ஏற்கெனவே மாநிலத்தில் தொழில்களை நிறுவ 25 புதிய துறைசார் கொள்கைகளை அமல்படுத்தியது. இதன் மூலம், உலகம் முழுவதிலும் இருக்கும் தொழிலதிபர்கள் 36 லட்சம் கோடி முதலீடு செய்ய முன்வந்திருப்பது குறிப்பிடத்தக்கது.