3 நாள் பயணமாக உத்தரப் பிரதேச மாநிலத்துக்குச் சென்றிருக்கும் நடிகர் ரஜினிகாந்த், அம்மாநில துணை முதல்வருடன் ஜெயிலர் திரைப்படத்தை பார்த்ததோடு, முதல்வர் யோகி ஆதித்யநாத்தையும் சந்தித்து ஆசிபெற்றார்.
தமிழகத்தின் சூப்பர் ஸ்டார் நடிகராக வலம் வருபவர் ரஜினிகாந்த். இவரது நடிப்பில் சமீபத்தில் வெளியான ஜெயிலர் திரைப்படம் மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றிருக்கிறது. ஏற்கெனவே இவரது நடிப்பில் 1995-ல் வெளியான பாட்ஷா திரைப்படத்திற்கு பிறகு, இப்படம் மிகப் பெரிய வெற்றியை பெற்றிருக்கிறது. இதனால் மிகுந்த மகிழ்ச்சியில் இருக்கும் ரஜினிகாந்த், இமயமலை, ஜார்கண்ட், உத்தரகண்ட் என ஆன்மிக தலங்களுக்கு சென்றிருக்கிறார்.
அந்த வகையில், பத்ரிநாத், பாபா குகை என பல்வேறு முக்கிய இடங்களில் தரிசனம் செய்தவர், ஜார்கண்ட் மாநில ஆளுநர் சி.பி.ராதாகிருஷ்ணனை சந்தித்துப் பேசினார். பின்னர், அங்குள்ள சின்னமஸ்தா காளி கோவிலுக்குச் சென்று தரிசனம் செய்தவர், கடந்த 18-ம் தேதி இரவு உத்தரப் பிரதேச மாநிலம் லக்னோவுக்குச் சென்றார். அவருக்கு அரசுத் தரப்பில் சிறப்பு மரியாதை அளிக்கும்படி உ.பி. மாநில அரசு உத்தரவிட்டிருக்கிறது.
அன்றையதினம் இரவு, நட்சத்திர ஹோட்டலில் தங்கி இருந்த ரஜினிகாந்த், மறுநாள் காலை உ.பி. மாநில ஆளுநர் ஆனந்தி பென் படேலை மரியாதை நிமித்தமாகச் சந்தித்தார். அப்போது செய்தியாளரை சந்தித்தவர், “ஜெயிலர் திரைப்படத்தை முதல்வர் யோகி ஆதித்யநாத்துக்கு காண்பிக்க வந்திருக்கிறேன்” என்றார். ஆனால், வேறு நிகழ்ச்சியில் கலந்துகொள்வதற்காக முதல்வர் யோகி அயோத்தி சென்று விட்டதால், அவருடன் சேர்ந்து ரஜினியால் படம் பார்க்க முடியவில்லை.
இதையடுத்து, உ.பி. துணை முதல்வர் கேசவ் பிரசாத் மௌரியாவுடன் ஜெயிலர் திரைப்படத்தின் சிறப்புக் காட்சியை கண்டுகளித்தார். இதற்காக, ரஜினியின் மனைவி லதாவும் விமானம் மூலம் லக்னோ வந்திருந்தார். இதனிடையே, முதல்வர் யோகி ஆதித்யநாத், அயோத்தியிலிருந்து திரும்பினார். இதைத் தொடர்ந்து, தனது மனைவி லதாவுடன் சேர்ந்து முதல்வர் யோகி இல்லத்திற்குச் சென்று சந்தித்தார். அப்போது, யோகியின் காலில் விழுந்து ஆசிர்வாதம் பெற்ற ரஜினி, அவருக்கு பூங்கொத்து வழங்கினார். யோகி முதல்வர் மட்டுமல்லாது மடாதிபதியும் கூட என்பது குறிப்பிடத்தக்கது.