“பிரிக்ஸ்” உச்சி மாநாட்டில் பங்கேற்பதற்காகவும், கிரீஸ் நாட்டு அதிபர் அழைப்பின் பேரிலும், 4 நாள் பயணமாக தென்னாப்பிரிக்கா மற்றும் கிரீஸ் நாடுகளுக்கு செல்லும் பாரதப் பிரதமர் நரேந்திர மோடி, பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்கிறார்.
இந்தியா, ரஷ்யா, பிரேசில், சீனா, தென்னாப்பிரிக்கா ஆகிய 5 நாடுகள் இணைந்து “பிரிக்ஸ்” என்கிற அமைப்பை உருவாக்கி இருக்கின்றன. இந்த அமைப்பின் உச்சி மாநாடு ஒவ்வொரு ஆண்டும் நடந்து வருகிறது. கொரோனா பரவல் காரணமாக, கடந்த 2019-ம் ஆண்டு முதல் கடந்த 4 ஆண்டுகளாக காணொளி வாயிலாகவே பிரிக்ஸ் மாநாடு நடந்தது.
இந்த நிலையில், 15-வது பிரிக்ஸ் உச்சி மாநாடு இந்த ஆண்டு தென்னாப்பிரிக்காவின் ஜோகஸ்பர்க் நகரில் வரும் 22-ம் தேதி முதல் 24-ம் தேதிவரை நேரடியாக நடைபெறுகிறது. இம்மாநாட்டில் பங்கேற்க வருமாறு தென்னாப்பிரிக்க அதிபர் சிறில் ரமாபோசா அழைப்பு விடுத்திருந்தார். இதை ஏற்று, பிரிக்ஸ் உச்சி மாநாட்டில் கலந்துகொள்வதற்காக பாரதப் பிரதமர் நரேந்திர மோடி நாளை தென்னாப்பிரிக்கா புறப்பட்டுச் செல்கிறார்.
தென்னாப்பிரிக்காவில் 3 நாட்கள் தங்கி இருக்கும் பிரதமர் மோடி, பிரிக்ஸ் மாநாடு நிறைவடைந்ததும் நடைபெறும் பிரிக்ஸ் அமைப்பில் உறுப்பினர் அல்லாத நாடுகளின் தலைவர்கள் பங்கேற்கும் “பிரிக்ஸ் – ஆப்பிரிக்கா அவுட்ரீச் மற்றும் பிரிக்ஸ் பிளஸ் உரையாடல்” என்கிற சிறப்பு நிகழ்ச்சியில் பங்கேற்கிறார். தொடர்ந்து, ஜோகன்ஸ்பர்க்கில் முக்கியத் தலைவர்களுடன் பல்வேறு விஷயங்கள் குறித்து விவாதிக்கிறார்.
பிரிக்ஸ் மாநாட்டை முடித்துக் கொண்டு புறப்படும் பிரதமர் மோடி, கிரீஸ் நாட்டின் பிரதமர் கிரியாகோஸ் மிட்சோடாகிஸ் அழைப்பின் பேரில், அந்நாட்டிற்குச் செல்கிறார். இதன் மூலம் 40 ஆண்டுகளுக்குப் பிறகு ஏதென்ஸ் நகருக்குச் செல்லும் முதல் பிரதமர் என்கிற பெருமையை பிரதமர் மோடி பெறுகிறார். இப்பயணத்தின்போது, இரு நாடுகளும் தங்களது உறவை விரிவான மூலோபாய கூட்டாண்மைக்கு மேம்படுத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
பின்னர், தாய் நாடு திரும்பும் மோடி, செப்டம்பர் 6, 7-ம் தேதிகளில் இந்தோனேஸியாவுக்குச் செல்கிறார். தொடர்ந்து, செப்டம்பர் 9, 10-ம் தேதிகளில் இந்தியாவில் நடைபெறும் ஜி20 உச்சி மாநாட்டில் பங்கேற்கிறார்.