நிலவின் தென் துருவத்தை ஆராய்ச்சி செய்வதற்காக, இந்திய விண்வெளி ஆராய்ச்சி மையமான இஸ்ரோவால், சந்திரயான்-3 விண்கலம் கடந்த மாதம் 14-ம் தேதி விண்ணில் செலுத்தப்பட்டது. நிலவின் சுற்று வட்டப் பாதையில் வெற்றிகரமாக சுற்று வந்துகொண்டிருக்கும் சந்திரயான்-3 விண்கலம், இன்று மாலை சரியாக 6.04 மணிக்கு நிலவில் தரையிறக்கப்படுகிறது. இதற்கான முயற்சியில் இஸ்ரோ விஞ்ஞானிகள் முழுவீச்சில் ஈடுபட்டிருக்கிறார்கள்.
இந்திய மக்களும், உலக நாடுகளும் சந்திராயன்-3 நிலவில் வெற்றிகரமாக தரையிறங்குவதைக் காண ஆவலுடன் காத்திருக்கின்றனர். அதேபோல, சந்திரயான்-3 விண்கலம் நல்லபடியாக தரையிறக்க வேண்டும் என்பதற்காக, இந்தியா மட்டுமல்லாது பல்வேறு உலக நாடுகளில் வசிக்கும் இந்தியர்களும் கோவில்களில் சிறப்பு பிரார்த்தனை செய்து வழிபாடு நடத்தி வருகின்றனர். சந்திராயன்-3 வெற்றிகரமாக தரையிறக்கப்பட்டால், இந்தியா புதிய வரலாறை படைக்கும்.
இந்த நிலையில்தான், இன்று இந்தியா வரலாறு படைக்கும் என்று மத்திய சிவில் விமான போக்குவரத்துத்துறை அமைச்சர் ஜோதிராதித்ய சிந்தியா உறுதிபடத் தெரிவித்திருக்கிறார். இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய ஜோதிராதித்ய சிந்தியா, “இன்று வரலாறுப் படைக்கப்படும். சந்திரனின் மேற்பரப்பில் இந்தியாவின் மூவர்ண தேசியக்கொடி பறக்கும். இதை நாடு முழுவதும் ஆவலுடன் எதிர்நோக்கிக் காத்திருக்கிறது. பிரதமர் நரேந்திர மோடியின் தலைமையிலும், நமது விஞ்ஞானிகளின் அயராத முயற்சியாலும் நமது நாடு இன்று வரலாற்றை எழுதவுள்ளது” என்று கூறியிருக்கிறார்.
அதேபோல, இந்தியாவின் 3-வது சந்திரப் பயணம் வெற்றிபெற, மத்தியப் பிரதேச முதல்வர் சிவராஜ் சிங் சௌஹான் வாழ்த்துத் தெரிவித்திருக்கிறார். இதுகுறித்து அவர் கூறுகையில், “எங்களது விண்வெளித் திட்டத்தால் நாடு முழுவதும் பெருமிதம் கொள்கிறது. எனது இதயம் மகிழ்ச்சியால் நிறைந்திருக்கிறது. இத்திட்டதிற்காக பெரு முயற்சி எடுத்த விஞ்ஞானிகள் உட்பட அடிமட்டத்திலுள்ள அனைத்துத் தரப்பினருக்கும் நன்றி தெரிவிக்க விரும்புகிறேன். இன்று நாம் புதிய வரலாறை படைக்கவிருப்பதற்கு அவர்களின் கடின உழைப்புதான் காரணம்.
அதேபோல, பிரதமர் நரேந்திர மோடியின் உறுதிப்பாட்டிற்கு நான் தலைவணங்குகிறேன். அவருடைய தலைமையில் நாடு பல்வேறு துறைகளில் தடைகளை உடைத்து புதிய சாதனை படைத்து வருகிறது. இன்று ஒவ்வொரு இந்தியனும் பெருமை கொள்ள வேண்டிய நாள். கட்டுக்கடங்காத மகிழ்ச்சியில் திளைக்க வேண்டிய நாள்” என்று தெரிவித்தார்.