சந்திரயான் -3 விக்ரம் லேண்டர் இன்று மாலை நிலவில் தரையிறங்க உள்ள நிலையில், அதனைக் கொண்டாடும் வகையில் ராமநாதபுரம் மாவட்டம் மண்டபத்தில், பொது மக்கள் தங்கள் மகிழ்ச்சியை வெளிப்படுத்தும் வகையில் ஃபளக்ஸ் பேனர் வைத்து அசத்தியுள்ளனர்.
இதுவரை, திருமணம், காது குத்து, கோயில் திருவிழா மற்றும் அரசியல் கட்சி நிகழ்ச்சிகளுக்கு மட்டுமே ஃப்ளக்ஸ் பேனர் வைக்கப்பட்டு இருந்தது. தற்போது, சந்திரயான் -3 விக்ரம் லேண்டர் தரையிறங்கும் நிகழ்வை கொண்டாடும் வகையில், ஃபளக்ஸ் பேனர் வைக்கப்பட்டுள்ளது.
சந்திரயான் -3 மிஷனின் மிக முக்கிய இலக்கான, நிலவின் தென் துருவத்தில், விக்ரம் லேண்டர் தரையிறங்க உள்ளது. அதிலிருந்து பிரிந்து சென்று பிரக்யான் ரோவர் நிலவின் பரப்பில் துள்ளியமாக ஆய்வு மேற்கொள்ள உள்ளது.
இந்திய விண்வெளி ஆய்வு மையத்தின் மைல் கல்லாக இந்த சாதனை பார்க்கப்படுகிறது. இந்திய விண்வெளி ஆய்வு மையத்தின் இந்த சாதனையை இந்தியர்கள் ஒவ்வொருவரும் மகிழ்ச்சியுடன் கொண்டி வருகின்றனர்.
இதேபோல, உலகம் முழுவதும் உள்ள இந்தியர்களும் தங்களது மகிழ்ச்சியைப் பல்வேறு வடிவங்களில் வெளிப்படுத்தி வருகின்றனர். மேலும், இந்திய விண்வெளி ஆய்வு மையத்தின் இந்த சாதனைப் பயணத்தை உலக நாடுகள் மிகவும் உன்னிப்பாகக் கவனித்து வருகிறது.
இந்த நிலையில், சந்திரயான் -3 விக்ரம் லேண்டர் இன்று மாலை நிலவில் தரையிறங்க உள்ளது., அதனைக் கொண்டாடும் வகையில், ராமநாதபுரம் மாவட்டம் மண்டபத்தில், முக்கிய இடங்களில் பொதுமக்கள் சார்பில், ஃப்ளக்ஸ் பேனர் வைத்து அசத்தியுள்ளனர்.
அதில், “இஸ்ரோ சந்திரயான் -3 நிலவில் தரையிறங்க இருப்பதால், நமது விஞ்ஞானிகள் முயற்சி வெற்றியடைய அனைவரும் இறைவனிடம் பிரார்த்தனை செய்து கொள்வோம்” என்றும், என் தேசம் என் பெருமை என தெரிவிக்கப்பட்டுள்ளது.
அந்த வழியாக சாலை மார்க்கமாக வரும் பொது மக்கள், மற்றும் சமூக ஆர்வலர்கள் இந்த ஃபளக்ஸ் பேனரை வியந்து பார்த்து, பாராட்டி வருகின்றனர்.
“இதுவரை, நமது மக்கள் திரைப்படப் படங்களுக்கும், நடிகர், நடிகைகள் பிறந்த நாளுக்கு உள்ளிட்டவைகளுக்கு மட்டுமே ஃப்ளக்ஸ் பேனர் வைத்து வந்தனர். மேலும், அரசியல் கட்சி தலைவர்கள் வருகை மற்றும் கட்சி கூட்டங்களுக்கும் ஃப்ளக்ஸ் பேனர் வைத்தனர். அந்தக் காலம் மலையேறி, தற்போது, இந்திய தேசத்தை நேசிக்கும் வகையிலும், இந்திய விஞ்ஞானிகளுக்கு புகழ் சேர்க்கும் வகையிலும், ஃபளக்ஸ் பேனர் வைக்கப்பட்டுள்ளது. இந்திய இளைஞர்களுக்கும், பொது மக்களுக்கும் தேசபற்றை மத்திய அரசு ஊட்டியதே இது போன்ற பெருமைக்குரிய நிகழ்வுகளுக்குக் காரணம் என கூறப்படுகிறது.