இந்திய கிரிக்கெட் அணி கடந்த 10 ஆண்டுகளாக ஐசிசி கோப்பையை வெல்லவில்லை. இதற்கு பல்வேறு காரணங்கள் இருந்தாலும் முக்கிய வீரர்கள் காயம் காரணமாக பெரிய தொடரில் விளையாடாமல் போனது பெரிய மைனஸ் ஆக பார்க்கப்படுகிறது.
இந்த நிலையில் தற்போது ஆறு மாதங்களில் மூன்று பெரிய தொடர் அடுத்தடுத்து நடக்க உள்ளது. ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடர், 50 ஓவர் உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர், t20 உலக கோப்பை கிரிக்கெட் தொடர் என மூன்று முக்கிய தொடர்கள் வரிசையாக வருகிறது. இதில் இந்திய அணி ஒரு ஐசிசி கோப்பையாவது வெல்ல வேண்டும் என்பதே ரசிகர்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.
இதற்கு வீரர்களின் உடல் தகுதி முக்கியம் என்பதால் கடந்த காலங்களில் செய்த தவறில் இருந்து பாடம் கற்றுக் கொண்டுள்ள பிசிசிஐ தற்போது வீரர்களுக்கு ஆறு கட்டளைகளை விடுத்திருக்கிறது. அதன்படி இந்த ஆறு கட்டளைகளையும் பின்பற்றி இருக்கிறார்களா என்பதை கண்காணித்து சோதனையின் மூலம் உறுதிப்படுத்திய பிறகு அணியில் இடம் கிடைக்கும் என்று கூறியுள்ளது. அதன்படி ஒவ்வொரு வீரர்களும் ஒரு நாளைக்கு குறைந்தபட்சம் ஒன்பது மணி நேரம் தூங்க வேண்டும். அதன் பிறகு ஓய்வு நேரத்தில் ஜிம்முக்கு சென்று உடற்பயிற்சி செய்ய வேண்டும். இதனை அடுத்து வீரர்கள் நடைபயிற்சி கண்டிப்பாக மேற்கொள்ள வேண்டும். மேலும் உடலையும் மனதையும் புத்துணர்ச்சியுடன் வைத்துக்கொள்ள யோகா பயிற்சியை வீரர்கள் கண்டிப்பாக மேற்கொள்ள வேண்டும்.
இதனை அடுத்து கிரிக்கெட் வீரர்கள் தங்களது உடலை ஃபிட்டாக வைத்துக் கொள்ள நீச்சல் பயிற்சியில் தினமும் ஈடுபட வேண்டும். இதனைத் தொடர்ந்து மாவு சத்துப் பொருட்களை குறைத்துக் கொண்டு புரதச்சத்து உள்ள பொருட்களை அதிக அளவு எடுத்துக் கொள்ள வேண்டும். இதனை கண்டிப்பாக ஒவ்வொரு வீரர்களும் பின்பற்ற வேண்டும். இதை மருத்துவக் குழு கண்காணித்து பிசிசிஐக்கு அறிக்கை அனுப்பும். இதில் ஏதேனும் குறை இருந்தால் வீரர்கள் அணியில் சேர்க்கப்பட மாட்டார்கள் என்றும் பிசிசிஐ எச்சரிக்கை விடுத்துள்ளது. வீரர்கள் உடல் தகுதியுடன் இருப்பதற்கே இப்படி ஒரு கட்டளைகளை பிசிசிஐ பிறப்பித்துள்ளது.