கிருஷ்ணகிரியில் பறக்கும் படை தாசில்தாரின் காரில் ஜி.பி.எஸ் கருவி வைத்து, அவர் செல்லும் இடத்தை துள்ளியமாக கண்காணித்து, ரேஷன் அரிசி கடத்திய கடத்தல் ஆசாமியை போலீசார் அதிரடியாக கைது செய்தனர்.
தமிழகத்தில் உள்ள நியாய விலைக் கடைகளில் 2.09 அரிசி குடும்ப அட்டை தாரர்களுக்கு மாதம்தோறும் இலவச அரிசி வழங்கப்படுகிறது. இதற்காக, மத்திய தொகுப்பில் இருந்து தமிழக அரசுக்கு அரிசி வழங்கப்படுகிறது. இவ்வாறு வழங்கப்படும் அரிசியை சிலர் நியாய விலைக் கடைகளில் இருந்து மொத்தமாக வாங்கி அதனை பாலீஷ் செய்து, விற்பனை செய்து வருகின்றனர். மேலும், சிலர், நியாய விலை அரிசியை கால்நடைகளுக்கு கொடுத்து வருகின்றனர்.
இதற்காக, நியாய விலைக் கடை ஊழியர்களின் துணையோடு அரிசி கடத்தப்படுகிறது. குறிப்பாக, தமிழகம் – கர்நாடகா மாநிலத்தின் எல்லையான கிருஷ்ணகிரி மாவட்டத்தில், ரேஷன் அரிசி கடத்தல் அதிக அளவில் நடப்பதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இதனால், நியாய விலைக் கடை அரிசி கடத்துபவர்களைப் பிடிக்க பறக்கும் படை அமைக்கப்பட்டுள்ளது. இவர்கள், கடத்தல் பாயிண்ட்டுக்குத் திடீரென சென்று, குற்றவாளிகளை கையும் களவுமாக பிடித்து வந்தனர்.
இதனால், பறக்கும்படையினரிடம் இருந்து தப்பிக்க நியாய விலைக் கடை அரிசி கடத்துவோர் பல்வேறு வழிகளைக் கையாண்டு வந்தனர். இதில், கிருஷ்ணகிரி பறக்கும் படை தாசில்தாரின் காரில் ஜி.பி.எஸ் கருவி வைத்து, அவர் எந்த வழியில் செல்கிறார். எப்போது செல்கிறார் எனக் கண்காணித்து ரேஷன் அரிசி கடத்தி வந்தனர். இந்த தகவல் போலீசார் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டது. இந்த சம்பவத்தை ரகசியமாக கண்காணித்த கிருஷ்ணகிரி போலீசார், ரேஷன் அரிசி கடத்தல் மன்னன் தேவராஜை கைது செய்தனர். அவருக்கு உடந்தையாக இருந்த தாசில்தார் டிரைவர் சுப்பிரமணி என்பவரையும் கைது செய்தனர்.