பிரபல தமிழ் திரைப்பட நடிகரான பிரகாஷ் ராஜ் மற்றும் பாபி சிம்ஹா ஆகியோரது புதிய வீட்டில் வருவாய்த்துறை அதிகாரிகள் திடீர் சோதனை நடத்தி வருவது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தமிழகத்தின் மிகப் பிரபலமான சுற்றுலா பகுதி கொடைக்கானல். இது மலைவாஸ்தலம் என்பதால், கோடை காலங்களில் இங்கு பலர் வந்து தங்குவது உண்டு. தொழில் அதிபர்கள் மற்றும் திரைப்பட நடிகர், நடிகைகள் உள்ளிட்டோர் இங்கு சொந்தமாக வீடு வாங்கி அவ்வப்போது வந்து செல்வதும் உண்டு.
அந்த வகையில், வில்பட்டி பஞ்சாயத்துக்குட்பட்ட பகுதியில் பிரபல நடிகர் பாபி சிம்ஹா, அரசு விதிமுறைகளை மீறியும், அரசுக்கு சொந்தமான இடத்திலும் மூன்று மாடியுடன் கூடிய பங்களா கட்டி வருவதாக, அப்பகுதி பொது மக்கள் புகார் தெரிவித்துள்ளனர்.
அதேபோல், கொடைக்கானலில் உள்ள பேத்துப்பாறை பகுதியில் நடிகர் பிரகாஷ் ராஜ் புதிய கட்டிடம் கட்டி வருவதாகவும், அவர் வீட்டிற்குச் செல்லும் பொது வழியில், சிமெண்ட் சாலை அமைத்துள்ளதாகவும், அந்தப் பாதையில் பொது மக்கள் பயன்படுத்த நடிகர் பிரகாஷ் ராஜ் எதிப்பு தெரிவித்து வருவதாகவும் விவசாயிகள் புகார் தெரிவித்துள்ளனர்.
இந்த சர்ச்சை தொடர்பாக கருத்து தெரிவித்துள்ள கோட்டாச்சியர் ராஜா, விவசாயிகள் குறைதீர் கூட்டத்தில், நடிகர்கள் பிரகாஷ் மற்றும் பாபி சிம்ஹா ஆகியோர் அரசு விதிமுறைகளை மீறி கட்டிடம் கட்டிவருவதாக புகார் வந்துள்ளது. நில அளவையர்களைக் கொண்டு முறையாக அளந்து பார்த்தும், ஆய்வு செய்த பின்பும், சம்பந்தப்பட்டவர்கள் தவறு செய்திருந்தால், அவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.
இந்த நிலையில், இந்த விவாரத்தில் உரிய பதில் அளிக்கும்படி, நடிகர்கள் பிரகாஷ் மற்றும் பாபி சிம்ஹா ஆகியோருக்கு வில்பட்டி ஊராட்சி சார்பில் நோட்டீஸ் வழங்கப்பட்டுள்ளது.
இதனிடையே, நடிகர்கள் பிரகாஷ் ராஜ் மற்றும் பாபி சிம்ஹா ஆகியோரது வீடுகளில் வருவாய்த்துறை அதிகாரிகள் திடீர் ஆய்வு நடத்தி வருகின்றனர்.